
இலங்கை கடல் பரப்புக்குள் இந்திய மீனவர்களை ஒரு நிமிடம் கூட மீன்பிடிக்க அனுமதி வழங்க மாட்டோம் என இந்திய மீனவர்களிடம் தெரிவித்துள்ளதாக, யாழ் மாவட்ட கடல் தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசங்களின் சம்மேளனத் தலைவர் அன்னரசா தெரிவித்துள்ளார்.
யாழில் இன்று இடம்பெற்ற ஊடாக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இந்திய – இலங்கை மீனவர்கள் பிரச்சினை தொடர்பில் சிநேகபூர்வமான கலந்துரையாடல் ஒன்று கடந்த 11ஆம் திகதி கச்சதீவில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் 8 மீனவ சங்கங்களை பிரதிநிதிவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். இந்தியாவிலிருந்து 15 மீனவ சங்கங்களை பிரதிநிதிவப்படுத்தும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
நாம் இந்திய மீனவர்களின் அத்து மீறலுக்கு எதிராக மட்டுமே போராடி வருகின்றோம். ஆனால் அதை, இந்திய தொப்பிள் கொடி உறவுகளுக்கு எதிரான போராட்டமாக சிலர் சந்தர்ப்பத்துக்கு ஏற்றவகையில் கதைத்து வருகின்றனர்.
நாம் அங்கே தெளிவாக கூறினோம், 2004 ஆம் ஆண்டு தொடக்கம் 2016 ஆண்டு வரை வடக்கு மக்களுக்கு, இந்திய உறவுகள் செய்த உதவிகளை நாம் மறக்க மாட்டோம். ஆனால் ஒரு நிமிடம் கூட இலங்கை கடல் பரப்புக்குள் இழுவை மடித்தொழிலை செய்ய அனுமதிக்க மாட்டோம்.
மீறினால் கடல் படையால் கைது செய்யப்படுவீர்கள். அத்துடன் எமது கோரிக்கை சரியாக நிறைவேற்றப்பட்டால் உங்கள் தரப்பில் உள்ள நியாமான கோரிக்கைகளை நாம் வெளியுறவு அமைச்சின் ஊடாக ஆராய்வோம் என கூறியிருந்தோம்.
அதேவேளை இந்திய நாட்டுப் படகு தொழிளார்கள் கூறியிருந்தார்கள், இழுவை மடித் தொழிலால் தாமும் பாதிக்கப்படுவதாக. அதற்கு எதிராக தாமும் செயற்படுவோம். தமது பிரச்சினை தொடர்பில் முதலமைச்சர் மட்டம் வரை கொண்டு சென்றும் எந்தப் பிரயோசனமும் இல்லையென்றும் அவர்கள் கூறியிருந்தார்கள்.
அத்துடன் எமது பிரச்சினையை அவர்கள் 90 வீதம் ஏற்றுக்கொண்டார்கள். அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இதற்கு நடுநிலை வகித்து பிரச்சினையை தீர்ப்பதாக கூறியிருந்தார்.- என்றார்.




