கொழும்பு – கண்டி வீதியூடான போக்குவரத்து பாதிப்பு!
கேகாலை, மீபிட்டியவில் உள்ள 88 கி.மீ மற்றும் 89 கி.மீ மைல் கல்லுக்கு இடையிலான கொழும்பு-கண்டி பிரதான வீதியின் ஒரு பகுதி மண்சரிவு அபாயம் காரணமாக மூடப்பட்டுள்ளது.
வாகன சாரதிகள் மாற்று வழிகளைப் பயன்படுத்தி விழிப்புடன் இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) வலியுறுத்தியுள்ளது.
அத்தியாவசிய பயணங்களைத் தவிர, வீதியைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறும் பொதுமக்கள் மேலும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
13 மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை நீடிப்பு!
மோசமான வானிலையால் 13 மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு எச்சரிக்கையை நாளை (29) அதிகாலை 02.00 மணி வரை நீட்டிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) தெரிவித்துள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை, மொனராகலை மற்றும் நுவரெலியா மாவட்டங்களில் உள்ள பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக NBRO தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், பதுளை, கொழும்பு, காலி, கேகாலை, குருநாகல், மொனராகலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களின் சில பகுதிகளுக்கு இரண்டாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கம்பஹா, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில் உள்ள பகுதிகளுக்கு முதலாம் நிலை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அனைத்து ரயில் சேவைகளும் இரத்து!
நாடு முழுவதும் நிலவும் கடுமையான வானிலை காரணமாக, இன்று (நவம்பர் 28) காலை 6 மணி முதல் அனைத்து வழித்தடங்களிலும் உள்ள அனைத்து ரயில் சேவைகளையும் ரயில்வே திணைக்களத்தினால் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.
தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் மண்சரிவு, பாறைகள் உருண்டு விழுதல், வெள்ளம் மற்றும் பல ரயில் பாதைகளில் மரங்கள் விழும் அபாயம் அதிகரித்து வருகின்றது.
இதனால், பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் மேலதிக பொது முகாமையாளர் சந்திரசேன பண்டாரா தெரிவித்தார்.
43,991 பேர் பாதிப்பு, 56 பேர் உயிரிழப்பு
தித்வா சூறாவளியால் ஏற்பட்ட தீவிர வானிலை காரணமாக 12,313 குடும்பங்களைச் சேர்ந்த 43,991 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் (DMC) தெரிவித்துள்ளது.
இன்று (28) காலை வரையான தகவலின்படி, மோசமான வானிலை தொடர்பான அனர்த்த சம்பவங்களில் 56 பேர் உயிரிழந்துள்ளனர்.
14 பேர் காயமடைந்துள்ளனர்.
மேலும் 21 பேர் காணாமல் போயுள்ளனர்.
மேலும், பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் நான்கு வீடுகள் முழுமையாகவும், 666 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.


