தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில் தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
இன்று வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
குறித்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தையிட்டி திஸ்ச விகாரை என்பது நாட்டின் சட்டத்திற்கு எதிராகவும் பௌத்த தர்மத்திற்கு எதிராகவும் சிங்கள பௌத்த ஆதிக்க மன நிலையில் நின்று கட்டப்பட்ட சட்டவிரோத கட்டடமாகும்.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த இரண்டு வருடங்களுக்கு மேலாக மக்கள் அறவழியில் போராட்டம் நடாத்தி வரும் சூழ்நிலையில் நேற்றைய தினம் போராட்டத்தின் போது பொலிஸாரின் அராஜகம் சிங்கள பௌத்த அடக்குமுறை என்பதை ஆணித்தரமாக கூறுவதோடு; இதனை வன்மையாக கண்டிக்கின்றோம்.
இனவாதம், மதவாதம் என்பவற்றிற்கு எதிரான அரசாங்கமாக தம்மை கூறிக் கொள்ளும் தற்போதைய அரசாங்கம் பொலிஸாரின் அடவாடி தனத்திற்கு எதிராக உடனடியாக சட்ட நடவடிக்கை எடுத்து அராஜகத்தில் ஈடுபாட்டோருக்கு தண்டனை பெற்றுக் கொடுப்பதோடு விகாரை விடயத்தில் நீதியை நிலை நாட்ட வேண்டும் எனவும் கேட்கின்றோம்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தமது ஒரு வருட ஆட்சியை கொண்டாடி முடித்திருக்கும் நிலையில் தையிட்டி விகாரை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு எந்த நீதியும் இதுவரை கிட்டவில்லை.
நீதி கிட்டுவதற்கான எந்தவிதமான அறிகுறியும் இதுவரை தென்படவில்லை. ஒவ்வொரு பௌர்ணமி தினத்திலும் நீதி கேட்டு பேராடுபவர்களை அச்சுறுத்துவதற்கு பொலிஸாரை கடமையில் ஈடுபடுத்துவதும் என்றுமில்லாதவாறு இம் மாதம் அடக்குமுறையை அவிழ்த்துவிட்டு அரசாங்கம் வேடிக்கை பார்ப்பதாகவே தோன்றுகிறது.
சட்டவிரோத விகாரை கட்டடத்தால் நிலமிழந்து பாதிக்கப்பட்டவரின் சார்பில் நின்று நீதி கேட்டு போராடுபவர்கள் கடந்த காலங்களிலும் பாதை ஓரத்தில் தற்காலிக கொட்டில் அமைத்து போராட்டம் நடாத்தி வந்திருக்கின்றனர்.
இந்த கொட்டிலால் எவருக்கும் எந்த விதமான பாதிப்பும் ஏற்படவில்லை. பொலிஸாரின் வாகனங்களும் ஏனையோரின் வாகனங்களும் அப் பாதை வழியே சென்று வந்திருக்கின்றன. இந்த தடவை அது மக்களுக்கும் வழிபாட்டுக்கு வருகின்றவர்களுக்கும் தடையாக இருக்கின்றது என்று அதனை பலவந்தமாக பொலிஸார் அகற்றியதோடு பெண்கள் மீதும் தாக்குதல் நடத்தியதை மனித உரிமைக்கு எதிரான செயற்பாடாகவே நாம் கருதுகின்றோம்.
தையிட்டி சட்டவிரோத விகாரை கட்டிடத்திற்கு எதிரான அறப்போராட்டம் நீதி கிடைக்கும் வரை தொடரும்.
இதனை கட்சி அரசியலாக எவரும் கொச்சைப்படுத்தாது அரசியல் போராட்டமாக கருதி அனைத்து தரப்பினரும் ஆதரவளிக்குமாறு கூறுகின்றோம்.அதனைவிடுத்து அமைதி காத்து இனப்படுகொலை ஆட்சியாளர்களுக்கு ஆதரவளிப்பது என்பது எம்மை நாமே அழித்து கொள்வதாக அமையும்.
மேலும் நாட்டின் சட்டம் அனைவருக்கும் சமம் என அடிக்கடி கூறும் தற்போதைய ஜனாதிபதி அதனை தனது அரசியலுக்காக மட்டும் பாவிக்காது; லஞ்சம், ஊழல் என்பதற்கு மட்டும் கட்டுப்படுத்தாது இனங்களின் தனித்துவம், அவர்களின் அடையாள பாதுகாப்பு,அரசியல் உறுதி பாட்டு பாதுகாப்பு என்பதற்கும் பயன்படுத்த வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றோம் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
