நாட்டில் இடம்பெற்ற இயற்கை அனர்த்தங்களுக்கு பின்னர், பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் சுயநிலைக்கு கொண்டுவருவதற்கான விசேட நிவாரணத் திட்டம் ஒன்றை நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சகம் அறிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடர்பான சுற்றறிக்கை அனைத்து அமைச்சு செயலாளர்கள், மாகாண சபை தலைமைச் செயலாளர்கள், துறைத் தலைவர்கள், மாவட்ட மற்றும் பிராந்திய செயலாளர்கள் ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ளது.
இந்த நிலையில், நாட்டில் ஏற்பட்ட அனர்த்தத்தால் சேதமடைந்த வீடுகளுக்கு ரூ.5 மில்லியன் வழங்குவது உட்பட பேரிடர் நிவாரணம் வழங்குவதற்கான சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
குறித்த சுற்றறிக்கையில்,
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு வீட்டிற்கும், வீடுகளை சுத்தம் செய்து பாதுகாப்பாக மீண்டும் குடியேறுவதற்காக, வீட்டு உரிமையைப் பொருட்படுத்தாமல் ஒருமுறை ரூ. 25,000 வழங்கப்படும்.
அவசர நிலையில் பாதிக்கப்பட்ட வீட்டில் மீளக் குடியேற அத்தியாவசிய சமையலறை உபகரணங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்க ஒவ்வொரு வீட்டுக்கும் ஒருமுறை ரூ. 50,000 நிவாரணம் வழங்கப்படும்.
நிலச்சரிவு / வெள்ளத்தால் வீடுகள் முற்றிலும் சேதமடைந்து வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு 2025 டிசம்பர், 2026 ஜனவரி, பிப்ரவரி மாதங்களுக்கு,
2 பேர் அல்லது குறைவான உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 25,000 ரூபாவும்,
2 பேருக்கு மேற்பட்ட உறுப்பினர்கள் கொண்ட குடும்பத்திற்கு மாதம் 50,000 ரூபாவும் வழங்கப்படும்.
மேலும், வீடுகளை முழுமையாக இழந்த வீட்டு உரிமையாளர்களுக்கு, புதிய வீடு கட்டப்படும் வரை மாதம் 25,000 ரூபா, அதிகபட்சமாக 6 மாதங்கள் வரை வழங்கப்படும்.
அனர்த்தத்தால் முற்றிலும் வாழ முடியாத நிலையில் உள்ள வீடுகளுக்குப் புதிய வீடு கட்ட, ஒரு வீட்டு அலகுக்கு ரூ. 50 லட்சம் (ரூ. 5,000,000) வழங்கப்படும்.
அரசு நிலம் வழங்க இயலாத சூழலில், புதிய வீடு கட்ட நிலம் வாங்குவதற்கும் அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை உதவி கிடைக்கும்.
பகுதியளவு சேதமடைந்த வீடுகளைப் பழுது பார்க்க, மதிப்பீட்டின் அடிப்படையில் அதிகபட்சம் ரூ. 25 லட்சம் (ரூ. 2,500,000) வரை நிதி வழங்கப்படும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட விவசாய விளைநிலங்களுக்கு அல்லது மீள நடவு செய்ய, ஒரு ஹெக்டாருக்கு ரூ. 2,00,000 ஒருமுறை வழங்கப்படும்.
பதிவு செய்யப்பட்ட கால்நடை பண்ணை உரிமையாளர்களுக்கு, பண்ணைகள் பாதிக்கப்பட்டதற்காக ஒருமுறை ரூ. 2,00,000 நிவாரணம் வழங்கப்படும்.
அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட தனிநபர், சிறு, மிகச் சிறு தொழில்முயற்சிகளை மீண்டும் இயங்கத்தக்க நிலைக்கு கொண்டுவர, ஒவ்வொரு அலகுக்கும் ரூ. 2,00,000 வழங்கப்படும்.
சேதமடைந்த மீன்பிடி படகுகளுக்கு, ஒரு படகுக்கு அதிகபட்சம் ரூ. 4,00,000 வரை இழப்பீடு வழங்கப்படும்.
பள்ளி மாணவர்களுக்கு புத்தகங்கள், ஆடைகள் போன்றவற்றை வாங்க, ஒரு மாணவருக்கு ஒருமுறை ரூ. 15,000 வழங்கப்படும்.
அனர்த்தத்தால் சேதமடைந்த வணிகக் கட்டிடங்களுக்கு, சேத மதிப்பீட்டின் அடிப்படையில், ஒவ்வொரு கட்டிட அலகுக்கும் அதிகபட்சம் ரூ. 50 லட்சம் வரை இழப்பீடு வழங்கப்படும்.
அனர்த்தத்தால் உயிரிழந்தவரின் அருகாமை உறவினருக்கோ அல்லது முழு ஊனமுற்றவருக்கோ ஒருவருக்கு ரூ. 10 லட்சம் (ரூ. 1,000,000) நிவாரணம் வழங்கப்படும்.
2025-01-21 வெளியிடப்பட்ட அனர்த்த நிவாரண சேவை வழிகாட்டல் சுற்றறிக்கை எண் 01/2025 இல் உள்ள விதிமுறைகள் படி பயனாளிகளைத் தேர்வு செய்வதும், சேதத்தை மதிப்பிடுவதும் மேற்கொள்ளப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த முழு திட்டமும் 28.11.2025 ஆம் தேதியிட்ட விசேட வர்த்தமானி அறிவிப்பு 2464/30 மூலம் அறிவிக்கப்பட்ட அவசர அனர்த்த நிலைக்கான சிறப்பு நிவாரணமாக அமைகிறது.

