நாட்டில் இன்று முதல் அதிகரிக்கும் மழை; பல பகுதிகளுக்கு சிவப்பு எச்சரிக்கை

நாடு முழுவதும் வடகிழக்குப் பருவப் பெயர்ச்சி நிலைமை படிப்படியாக தாபிக்கப்பட்டு வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. 

 

அதன்படி வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் மழையுடனான வானிலை இன்று இரவு முதல் அதிகரிக்கக் கூடும் என அந்த திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. 

வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மட்டக்களப்பு மற்றும் அம்பாறை மாவட்டங்களின் சில இடங்களில் 50 மி.மீ. இக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும். 

நாட்டின் ஏனைய பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும். 

நாட்டை சூழ உள்ள கடல் பிராந்தியங்களின் சில இடங்களில்  மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.

கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 25 – 35 km  வேகத்தில் வடகிழக்குத் திசையில் இருந்து அல்லது மாறுபட்ட திசைகளில் இருந்து காற்று வீசும்.

கொழும்பு தொடக்கம் புத்தளம், காங்கேசன்துறை, திருகோணமலை ஊடாக பொத்துவில் வரையான  கடல் பிராந்தியங்களில் மணித்தியாலத்திற்கு 50 km இலும் கூடிய வேகத்தில் அடிக்கடி காற்று அதிகரித்து வீசக் கூடும். இவ்வாறான சந்தர்ப்பங்களில் இக் கடல் பிராந்தியங்கள் ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும்.

நாட்டை சூழ உள்ள ஏனைய கடல் பிராந்தியங்கள் இடைக்கிடையே ஓரளவு கொந்தளிப்பான நிலையில் காணப்படும்.

இடியுடன் கூடிய மழையின் போது ஏற்படக்கூடிய தற்காலிகமான பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

இதேவேளை சீரற்ற வானிலை காரணமாக நாட்டின் 04 மாவட்டங்களுக்குத் தொடர்ந்தும் மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகத் தேசிய கட்டட ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 

அதற்கமைய, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தளை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

அத்துடன்  நாட்டின் அனைத்து நீர்த்தேக்கங்களின் நீர் மட்டங்களும் சாதாரண நீர் மட்டத்தை நோக்கி வந்துகொண்டிருப்பதாக நீர்ப்பாசனத் திணைக்களம் தெரிவித்துள்ளது. 

Leave a Reply