
கொழும்பு, மார்ச் 14
நாட்டு மக்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி, நாட்டின் பிரதான எதிர்க் கட்சி என்ற முறையில் எதிர்வரும் செவ்வாய்க்கிழமை கொழும்பில் களமிறங்கவுள்ளதாகவும் அன்றைய தினம் ஜனாதிபதிக்கு ஒரு மாத கால அவகாசத்தை வழங்கவுள்ளதாகவும் ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.
எதிர்க் கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். இதன்போது தொடர்ந்துரைத்த அவர்,
‘எதிர்க் கட்சி எதனையும் செய்வதில்லை, வெளியில் வந்து மக்களுக்காக போராடுவதில்லை என்று ஒவ்வொருவரும் எதிர்க் கட்சிக்கு விரல் நீட்டுகின்றனர். ஆம் நாட்டின் பிரதான எதிர்க் கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, எதிர்வரும் செவ்வாய்க்கிழமை மாலை 2.00 மணிக்கு வீதிக்கு இறங்கவுள்ளது.
எனவே நாட்டின் தற்போதைய நிலைமைக்கு காரணமானவர்களுக்கு எதிர்ப்பை தெரிவிப்பதற்காக வெளியில் வர நினைத்துக் கொண்டிருக்கும் அனைவரையும் அன்றைய தினம் எமது போராட்டத்தில் பங்கேற்குமாறு அழைப்பு விடுக்கின்றோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.




