ரஷ்ய தாக்குதலில் மரியுபோலில் மட்டும் பொதுமக்கள் 2,100 பேர் படுகொலை

கீவ், மார்ச் 14

உக்ரைன் மீது ரஷ்யா இன்று 18-வது நாளாக போர் தொடுத்து வருகிறது. உக்ரைனின் பல்வேறு நகரங்களை கைப்பற்றி வரும் ரஷ்ய படைகள் தலைநகர் கீவ்வை கைப்பற்றுவதில் மும்முரம் காட்டி வருகின்றன.

அதேவேளை, தென்கிழக்கு நகரமான மரியுபோல் நகரிலும் ரஷியா வான்வெளி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்த போரை நிறுத்த பல்வேறு நாடுகள் முயற்சித்தும் வருகின்றன. இந்த முயற்சிகளின் பலனாக உக்ரைனின் சில பகுதிகளில் தற்காலிகமாக சண்டையை நிறுத்துவதாக ரஷியா அறிவித்துள்ளது. மேலும், சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பொதுமக்கள் பாதுகாப்பாக வெளியேறவும், மனிதாபிமான உதவிகள் வழங்கவும் ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளது.

ஆனால், பெரும்பாலான பகுதிகளில் சண்டை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்நிலையில், ரஷ்ய படைகளால் முற்றுகையிடப்பட்ட உக்ரைனின் மரியுபோல் நகரில், இதுவரை சுமார் 2,100 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளதாக நகர கவுன்சில் தெரிவித்துள்ளது. மரியுபோல் மீது ஏற்கனவே 100க்கும் மேற்பட்ட குண்டுகள் வீசப்பட்டுள்ள நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், நகரத்தில் சுமார் 22 குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்துள்ளன.

மேலும் ரஷ்யப் படைகள் தொடர்ந்து மக்கள் குடியிருப்பு பகுதிகளை குறிவைத்து குண்டு வீசி வருகின்றன. நகரை விட்டு வெளியேறும் பாதைகளை எதிரிநாட்டு படைகள் தடுத்து வருகின்றன. 18 நாட்களாக மக்கள் கடினமான சூழ்நிலையில் உள்ளனர். நகரத்தில் மின்சாரம், தண்ணீர் அல்லது வெப்பமூட்டும் வசதி இல்லை மேலும் மொபைல் தொடர்பு இல்லை. உணவு மற்றும் தண்ணீர் தீர்ந்துவிட்டன என்று தெரிவித்துள்ளனர்.

Leave a Reply