பருத்தித்துறை நவீன சந்தை கட்டடத்தில் நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை!

பருத்தித்துறை நகரசபைக்கு சொந்தமான நவீன சந்தை கட்டடத் தொகுதியில் நடைபாதையினை ஆக்கிரமித்து மேற்கொள்ளப்பட்டு வந்த வியாபார நடவடிக்கைகளை அகற்றுவதற்கு நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதுடன் குறித்த நடைமுறையினை மீறும் வர்த்தகர்கள் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பருத்தித்துறை நகரின் மத்தியில் அமைந்துள்ள நவீன சந்தை கட்டடத் தொகுதியில் அமைந்துள்ள வியாபார நிலையங்களுக்கு முன்பாக அவர்களுக்கு ஒப்பந்தத்தின் பிரகாரம் வரையறுக்கப்பட்ட இடத்திற்கு மேலதிகமான இடத்தை ஆக்கிரமித்து பொருட்கைள பரப்பி வியாபார நடவடிக்கை இடம்பெற்று வருகிறது. 

இதனால் நடைபாதையினை முற்றாகவே பயன்படுத்த முடியாத நிலையில் பொதுமக்கள் பெரும் அசௌகரியங்களுக்கு முகம் கொடுத்துவருகின்றனர். 

குறிப்பாக வெயில், மழை நேரங்களில் பிரதான வீதியூடாகவே பயணித்து கடைகளுக்கு செல்லும் நிலை காணப்படுகிறது.

இவ்வாறான நிலையில் கடந்த 01 திகதி  முதல் வரையறுக்கப்பட்ட இடத்திற்குள்ளாக பொதுமக்கள் நடைபாதையை பயன்படுத்துவதற்கு இடையூறு இல்லாத வகையில் வியாபார நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறு நவீன சந்தை கட்டடத் தொகுதியில் உள்ள வர்த்தக நிலையங்களுக்கு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேற்று (08) இரவு குறித்த நடைமுறைகள் பின்பற்றப்படுகின்றதா என்பது குறித்து பருத்தித்துறை நகரபிதா வின்சென் டீ போல் டக்ளஸ் போல் நேரில் பார்வையிட்டிருந்தார். 

இதன்போது மேற்குறித்த அறிவுறுத்தலை மீறி செயற்பட்டு வந்த சில வர்த்தக நிலையங்கள் செயற்பட்டமை கண்டறியப்பட்டது. 

ஏற்கனவே அறிவுறுத்தப்பட்டதற்கு அமைவாக செயற்படாவிடில் நடைபாதையை ஆக்கிரமித்து வைக்கப்பட்ட பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்த நகரசபை தரப்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நகரபிதாவினால் நேரடியாக அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்தது. 

இதையடுத்து இன்று (09) வெள்ளிக்கிழமை காலை நகரசபை உத்தியோகத்தர்கள் நேரில் பார்வையிட்டு, திங்கட்கிழமை முதல் மேற்குறித்த நடைமுறை இறுக்கமாக நடைமுறைப்படுத்தப்படும் என குறித்த வர்த்தக நிலையங்களுக்கு இறுதி அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *