
15 வருடங்களாக அடிப்படை சம்பளம் 40 ஆயிரம் ரூபாவை பெறுகின்றோம். இப்போது உள்ள விலைவாசி அதிகரிப்பில் இது எமக்கு போதாது என வடக்கு மாகாண அரச சேவை பட்டதாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
இன்று யாழ்ப்பாணம் மாவட்டச் செயலகத்துக்கு முன்பாக முன்னெடுத்த போராட்டத்தின் பின்னர் ஊடகங்களுக்கு இவ்வாறு கருத்து தெரிவித்தனர்.
அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக நியமிக்கப்பட்டவர்கள் இன்று பல்வேறு இன்னல்களை எதிர் நோக்கி வருகின்றனர். இதனை கருத்தில் கொண்டு நாடளாவிய ரீதியில் இன்று போராட்டம் இடம்பெற்று வருகிறது.
1999, 2008 நியமிக்கப்பட்ட உத்தியோகத்தர்களுக்கு பதவி உயர்வு வேண்டியும், முறையான சேவை பிரமாண குறிப்புகளை நடைமுறைபபடுத்தக் கோரியும், பதவி உயர்வுடன் கூடிய சம்பள அதிகரிப்பை கோரியும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம்.
இன்று வரை சம்பளம் உயர்வு இல்லை. 15 வருடங்களாக அடிப்படை சம்பளம் 40 ஆயிரம் ரூபாவை பெறுகின்றோம். இப்போது உள்ள விலைவாசி அதிகரிப்பில் இது எமக்கு போதாது. சம்பள அளவுத் திட்டம் உண்டு அதை நடைமுறைப்படுத்த வேண்டும். 2016 ஆம் ஆண்டு திருப்பப் பெற்ற ஓய்வூதிய காப்புறுதியை பெற்றுத் தர வேண்டும்.- என்றனர்.




