பாராளுமன்ற ஆலோசனைக் குழுவால் சட்டத்தை மீறி சேவையிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்ட பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் சமிந்த குலரத்ன தாக்கல் செய்த மனுவில், பிரதிவாதியாகப் பெயரிடப்பட்டுள்ள சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதில்லை என சட்டமா அதிபர் மேன்முறையீட்டு நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து, சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதாக ஜனாதிபதி சட்டத்தரணி கே.கனகீஸ்வரன் நீதிமன்றத்திடம் தெரிவித்தார்.
கடந்தவாரம் இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது சபாநாயகர் சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் சாயா ஸ்ரீ நம்முனி, இந்த வழக்கை சமரசம் செய்வதற்கான முன்மொழிவுகளைச் சமர்ப்பிக்கத் தயாராக இருப்பதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
அதன்படி, இந்த மனுவை சமரசம் செய்வதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்வதற்காக, மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர், நீதிபதி ரொஹந்த அபேசூரிய மற்றும் நீதியரசர்கள் பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் அமர்வு முன்பு, கடந்த வெள்ளிக்கிழமை இந்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அப்போதைய நிலையில், சட்ட மா அதிபருக்காக ஆஜரான அரச சட்டத்தரணி, பிரதிவாதியான சபாநாயகருக்காக தாம் ஆஜராகப் போவதில்லை என நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
அதன்படி, அப்போது நீதிமன்றத்தில் ஆஜரான ஜனாதிபதி சட்ட ஆலோசகர் கனகீஸ்வரன், தாம் சபாநாயகருக்காக ஆஜராகவிருப்பதாக நீதிமன்றத்துக்குத் தெரிவித்தார்.
அதன்படி, மனு தொடர்பான வரையறுக்கப்பட்ட ஆட்சேபனைகளை ஏப்ரல் 20ஆம் திகதிக்கு முன்னர் தாக்கல் செய்யுமாறு எதிர்த்தரப்பினருக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.
இந்த மனுவில் சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன, பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் மற்றும் பாராளுமன்ற ஆலோசனைக் குழுவின் உறுப்பினர்கள் ஆகியோர் பிரதிவாதிகளாக பெயரிடப்பட்டுள்ளனர்.





