மண்டைதீவு மனிதப் புதைகுழி வழக்கு ஜூலை 28ஆம் திகதி வரை ஒத்திவைப்பு!

யாழ். மண்டைதீவு மனிதப் புதைகுழி தொடர்பான வழக்கு விசாரணை, ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றத்தில் நீதிவான் அனீபா ரஜீவ் முன்னிலையில் இன்று எடுத்துக்கொள்ளப்பட்ட போது, அதனை எதிர்வரும் ஜூலை மாதம் 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்க மன்று உத்தரவிட்டது.

1990களில் இடம்பெற்ற இராணுவ நடவடிக்கை ஒன்றின் போது கொல்லப்பட்டவர்கள் புதைக்கப்பட்டதாகக் கருதப்படும் மண்டைதீவு புதைகுழி விவகாரம் தீவகப் பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது. இது தொடர்பான முறைப்பாட்டை, கடந்த ஆண்டு செப்டெம்பர் 4 ஆம் திகதி தனது மகனைப் பறிகொடுத்த 81 வயதுடைய ஸ்டீபன் மரில்டா மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர் சுவாமிநாதன் பிரகலாதன் ஆகியோர் ஊர்காவற்றுறை பொலிஸில் பதிவு செய்திருந்தனர்.

இன்றைய தினம் வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, பொலிஸார் தரப்பிலிருந்து சான்றுகள் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட தரப்பு மற்றும் காணாமற்போனோர் பற்றிய அலுவலகம் சார்பாக பூர்ணி மரியநாயகம் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் சட்டத்தரணி), த.செல்வக்குமார் (காணாமற்போனோர் பற்றிய அலுவலகத்தின் பிராந்திய இணைப்பாளர்), சுவாமிநாதன் பிரகலாதன் (வேலணை பிரதேச சபையின் உறுப்பினர் மற்றும் தீவக முன்னேற்றக் கழகத்தின் தலைவர்) ஆகியோர் முன்னிலையாகியிருந்தனர்.

முன்னதாக கடந்த 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதி நடைபெற்ற விசாரணையின் போது, புதைகுழி அகழ்வுப் பணிக்கான வசதிகள் இல்லை என ஊர்காவற்றுறைப் பொலிஸார் தெரிவித்திருந்தனர். அதனைத் தொடர்ந்து, இந்த வழக்கு யாழ்ப்பாணம் மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

மண்டைதீவு மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பான விரிவான அறிக்கையைச் சமர்ப்பிக்குமாறு யாழ். மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவுக்கு நீதிவான் ஏற்கனவே உத்தரவு பிறப்பித்திருந்த நிலையிலேயே, இந்த வழக்கு மீண்டும் ஜூலை 28 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply