உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலுக்கு சூத்திரதாரி என்ற பெயரில் ஒரு மாயையைத் தோற்றுவித்து, அதனூடாகத் தேசத்தைப் பாதுகாத்த இராணுவ வீரர்களையும் அரசியல்வாதிகளையும் வேட்டையாடும் நடவடிக்கையை அநுர அரசாங்கம் உடனடியாக நிறுத்த வேண்டும் என புதிய மக்கள் முன்னணியின் தலைவர் சுகீஸ்வர பண்டார தெரிவித்துள்ளார்.
இரத்தினபுரி மாவட்டத்தில் இடம்பெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினரைப் பாதுகாப்பதற்கான கையெழுத்து சேகரிக்கும் நிகழ்வில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குற்றம் சாட்டினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குச் சூத்திரதாரியைக் கண்டுபிடிப்போம் என்ற வாக்குறுதியை வழங்கியே அநுர அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது. ஆனால், சூத்திரதாரி என்பது ஒரு கட்டுக்கதை என்பதை ஜே.வி.பி தலைவர்கள் நன்கு அறிவார்கள். கர்தினால் உள்ளிட்ட கத்தோலிக்க சமூகத்துக்குத் திருப்தியை உண்டாக்க, தற்போது சினிமா பாணியிலான பழிவாங்கல் நாடகத்தை அரசாங்கம் அரங்கேற்றத் தொடங்கியுள்ளது.
மட்டக்களப்பு சீயோன் தேவாலயத் தாக்குதலுக்குப் பிள்ளையான் தொடர்புபட்டிருப்பதாக ஜனாதிபதி கூறுகிறார். ஆனால், ஒரு வருட காலம் சிறையில் வைக்கப்பட்டிருந்த பிள்ளையானுக்கு எதிராக நீதிமன்றத்திலோ அல்லது பாராளுமன்றத்திலோ முன்வைக்கப்பட்ட விடயங்களில் தாக்குதலுக்குத் தொடர்பான எந்தவொரு நேரடிச் சாட்சியமும் இல்லை.
கோட்டாபய ராஜபக்ஷவை இதனுடன் தொடர்புபடுத்துவதற்குப் பிள்ளையான் வாயால் எதையாவது சொல்ல வைக்கவே அவருக்குக் கடும் அழுத்தம் பிரயோகிக்கப்பட்டது
தற்போது தேசத்தைப் பாதுகாத்த மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே இலக்கு வைக்கப்பட்டுள்ளார். கட்டுவாபிட்டிய தேவாலயம் இருந்த இடத்தை அவரே காட்டிக் கொடுத்தார் என்பது அப்பட்டமான பொய். தாக்குதல் நடந்த போது அவர் இந்தியாவிலும், அதற்கு ஒரு வருடத்துக்கு முன்னர் மலேசியாவிலும் இருந்தார்.
அமெரிக்க எப்.பி.ஐ அறிக்கை, ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கைகள் மற்றும் சர்வதேச புலனாய்வுத் தகவல்கள் அனைத்தும் சஹ்ரானே இதற்குச் சூத்திரதாரி என்பதை உறுதிப்படுத்தியுள்ளன. நிலைமை இவ்வாறிருக்க, ரவி செனவிரத்ன மற்றும் ஷானி அபேசேகர ஆகியோரின் திரைக்கதைக்கு அமையச் சுரேஷ் சலேயைப் பிணைக் கைதியாக அடைத்து வைத்துள்ளனர்.
சுரேஷ் சலே போன்ற வீரர்களை இருட்டறையில் அடைத்து வைத்துள்ள இந்த அரசாங்கம், மறுபுறம் இஷாரா செவ்வந்தி போன்றவர்களுக்காகப் பொலிஸ் நிலையத்தில் கேக் வெட்டிப் பார்ட்டி நடத்துகிறது. 16 மாத கால அநுர அரசாங்கத்தின் ஆட்சியில் நாட்டின் சட்டம் எந்தளவுக்குச் சீரழிந்து போயுள்ளது என்பதற்கு இதுவே சான்றாகும் என்றார்.





