குமுழமுனையில் மக்கள் குறைகேள் சந்திப்பு நடாத்திய எம்.பி ரவிகரன் !

முல்லைத்தீவு – கரைதுறைப்பற்று பிரதேசசெயலாளர் பிரிவிற்குட்பட்ட குமுழமுனை கிழக்கு, தாமரைக்கேணிப் பகுதியைச்சேர்ந்த மக்களிடம் வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் குறைகேள் சந்திப்பொன்றை நடாத்தியுள்ளார்.

குறிப்பாக அப்பகுதி மக்களின் அழைப்பையேற்று குறித்த பகுதிக்கு நேரில் சென்ற நாடாளுமன்ற உறுப்பினர் அப்பகுதி மக்கள் எதிர்நோக்கும் சிக்கல்கள், குறைபாடுகள் குறித்து விரிவாகக் கேட்டறிந்துகொண்டார்.

அந்தவகையில் தாமரைக்கேணிப் பகுதியில் பெருமளவான காணிப்பிணக்குகள் காணப்படுவதாக மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது. குறிப்பாக அப்பகுதியிலுள்ள காணிகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் இதுவரை வழங்கப்படவில்லை எனவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்தோடு அப்பகுதியில் பல உள்ளகவீதிப் பிணக்குகள் காணப்படுவதாகவும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது. 

குறிப்பாக பல உள்ளக வீதிகள் சட்டவிரோதமாக மூடப்பட்டிருப்பதுடன், அகலப்படுத்தப்படாமலும் காணப்படுவதால் தம் பல்வேறு இடர்பாடுகளுக்கு முகங்கொடுத்துவருவதாக மக்கள் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் சுட்டிக்காட்டியதுடன், குறித்த பிரச்சினைக்குத் தீர்வினைப்பெற்றுத்தருமாறும் கோரினர்.

அதேவேளை தாமரைக்கேணிப்பகுதியிலுள்ள அனைத்து உள்ளக வீதிகளும் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டு காணப்படுவதாகவும், டித்வா பேரனர்த்தத்தின் பிற்பாடு அந்தப்பாதிப்பு நிலமைகள் இன்னும் அதிகரித்திருப்பதாகவும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முறையீடு செய்யப்பட்டது. 

இதனால் குறித்த உள்ளகவீதிகளைப் பயன்படுத்தும் அப்பகுதியைச்சேர்ந்த மாணவர்கள், விவசாயிகள், முதியவர்கள், நோயாளர்கள் என அனைத்துத் தரப்பினரும் பாதிப்புக்தளுக்கு முகங்கொடுத்துவருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. 

எனவே குறித்த உள்ளக வீதிகளைச் சீரமைப்புச்செய்துதருமாறும் இதன்போது மக்களால் நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

அத்தோடு குறித்த பகுதியில் வடிகாலமைப்பு வசதிதளை ஏற்படுத்துவது தொடர்பாகவும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

மேலும் இதன்போது போர்க்காலப்பகுதியில் ஏற்பட்ட சொத்தழிவைப் பெற்றுக்கொடுத்தல், வீதி விளக்குகளைப் பொருத்துதல், சிறுகடல் தொழிலாளர்கள் பயன்படுத்தும் வீதியைச் சீரமைப்புச்செய்தல், மின்னிணைப்பு இல்லாத வீடுகளுக்கு மின்னிணைப்புக்களைப் பெற்றுக்கொடுத்தல் உள்ளிட்ட பல கோரிக்கைகளும் மக்களால் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரிடம் முன்வைக்கப்பட்டது.

இது தவிர  ‘அஸ்வெஸ்ம’ நலன்புரித்திட்டக் கொடுப்பனவு வழங்கலில் உள்ள முறைகேடுகள் தொடர்பிலும் இதன்போது நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டது.

இந்நிலையில் மக்களின் குறைபாடுகளையும், கோரிக்கைகளையும் கேட்டறிந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், மக்களால் முன்வைக்கப்பட்ட குறைபாடுகள் தொடர்பாகவும், கோரிக்கைகள் தொடர்பாகவும் தம்மால் கவனஞ்செலுத்தப்படுமெனத் தெரிவித்தார்.

Leave a Reply