வடக்கு மாகாணத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக தொடரும் ஆசிரியர் இடமாற்ற தோல்விகளால் வன்னி மாணவர்களின் கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படுவதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே கல்வியில் சம அணுகலுக்காக தொடர்ந்து பசித்திருக்கும் வன்னிப் பிள்ளைகளுக்கான உடனடித் தீர்வைத் தருமாறு பிரதமரும் கல்வி அமைச்சருமான ஹரிணி அமரசூரியவிடம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கோரிக்கையினையும் முன்வைத்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று இடம்பெற்ற விளையாட்டில் ஊக்குப் பதார்த்தப் பயன்பாட்டுக்கு எதிரான சமவாயச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் தொடர்பான விவாத்தில் பங்கேற்றுக் கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்விடயம் தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
கடந்த ஆண்டு தேசிய மற்றும் மாகாண இடமாற்ற கொள்கைகளுக்கு முரணாக சேவையின் தேவை கருதிய இடமாற்றம் என 2025இல் வடமாகாண கல்வித்திணைக்களம் வழங்கிய 290 அளவிலான ஆசிரியர்களுக்கான இடமாற்றத்தை யாழ் மேல் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, வடமாகாண கல்வித்திணைக்களம் மீளப்பெற்றுக்கொண்டது.
மீண்டும் இவ்வருடம் அதே போன்றதொரு இடமாற்றத்தை வருடாந்த இடமாற்றத்துடன் இணைத்து வடமாகாணக் கல்வித் திணைக்களம் நடைமுறைப்படுத் தொடங்கி தற்போது 193 அளவிலான சேவையின் தேவை கருதிய இடமாற்றத்தை மனித உரிமைகள் ஆணைக்குழு இரத்துச்செய்துள்ளது.
இந்நிலையில் வன்னிப் பெருநிலப்பரப்பிலிருந்து (கிளிநொச்சி அடங்கலாக) 368 அளவிலான ஆசிரியர்கள் யாழ்ப்பாணம் செல்லவுள்ள நிலையில் யாழில் இருந்து சேவையின் தேவை என்ற இடமாற்ற முயற்சியும், மனித உரிமைகள் ஆணைக்குழுவால் இடைநிறுத்தப்படவுள்ளது.
இரண்டு ஆண்டுகளாக தொடரும் இந்த இடமாற்ற தோல்விகளுக்கு யார் பொறுப்புக்கூறுவது?
போதியளவு ஆசிரியர்கள் இன்றி கல்விக்கான சம அணுகல் மறுக்கப்படும் எமது பிரதேச மாணவர்களுக்கு யார் வகை கூறுவது?
இவ்வாறான ஓர்முறைகேடாகும் சேவையின் தேவை அடிப்படையிலான இடமாற்றத்தை ஆசிரியர்கள் மீது திணித்தது ஏன்?
இந்த நாட்டின் பிரதமர் அவர்களே…கல்வியில் சம அணுகலுக்காக தொடர்ந்து பசித்திருக்கும் எமது பிள்ளைகளுக்கான உடனடித் தீர்வைத்தாருங்கள் – என்றார்.





