இராணுவத்தின் கையகப்படுத்தலில் உள்ள முல்லைத்தீவு – முள்ளியவளை அஞ்சல் அலுவலகக் காணியினை விடுவிக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் வலியுறுத்தியுள்ளார்.
இந்நிலையில் எதிர்வரும் ஜூலை மாதத்திற்குள் குறித்த முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்குரிய காணியை விடுவிப்புச் செய்வதற்கு இராணுவத்தினர் இணங்கியுள்ளதாகத் தெரிவித்த வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா அரியரத்ன, குறித்த காணி விடுவிப்புச் செய்யப்பட்டதன் பின்னர் அடுத்த ஆண்டில் அக்காணியில் அஞ்சல் அலுவலகத்தை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுமெனத் தெரிவித்தார்.
நாடாளுமன்றில் இன்று வாய்மூல விடைக்கான வினா நேரத்திலேயே இவ் விடயந்தொடர்பில் பேசப்பட்டுள்ளது.
இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கருத்துத் தெரிவிக்கையில்,
இற்றைக்கு 40 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்தின் ஊடான சேவை வழங்கல் தரமுயர்த்தப்பட்டு நடைபெறுவதாக அறியமுடிகிறது.
தொடர்ந்து வாடகைக் கட்டடங்களில் இயங்கும் முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்துக்கான காணி அளவீடு 1986.07.02 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்டு அஞ்சல் அலுவலக கட்டடத்துக்கான வரைபடமும் தயாரிக்கப்பட்டிருந்தது. ( P Plan No M21 Survey Map)
கேப்பாபுலவு தொடக்கம் குமுழமுனை வரையாக கிட்டத்தட்ட 22 கிராம அலுவலர் பிரிவுகளுக்கான அஞ்சல் சேவைகளை வழங்கும் குறித்த அஞ்சல் அலுவலகத்துக்குரிய காணி, இராணுவ கையகப்படுத்தலில் அவர்களின் பயன்பாட்டில் இல்லாத வெற்றுக்காணியாகவே காணப்படுகிறது.
தேசிய மக்கள் சக்தியின் ஆட்சியில் இராணுவம் உள்ளடங்கலாக பல்வேறு திணைக்களங்களினதும் ஆக்கிரமிப்பிலுள்ள காணிகள் விடுவிக்கப்படுவதற்கான ஒழுங்குகள் நடைபெறுவதாக கூறப்படும் இவ்வேளையில்
முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்துக்கென 35 ஆண்டுகளுக்கு முன்னர் அளவீடு செய்து வரைபடமாக்கப்பட்ட குறித்த காணியை – இராணுவ கையகப்படுத்தலிலும் பயன்பாடற்று காணப்படும் குறித்த காணியை இவ்வாண்டே விடுவிப்பதற்குரிய தலையீட்டை வெகுசன ஊடக பிரதி அமைச்சர் என்ற வகையில் தாங்கள் மேற்கொள்வீர்களா எனது முதலாவது கேள்வியாக கேட்டுக்கொள்கிறேன் என நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் கேள்வி எழுப்பினார்.
இதன்போது வெகுசன ஊடகப் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்ன பதிலளிக்கையில்,
முள்ளியவளை அஞ்சல் அலுவலகம் ஒரு தனியார் கட்டிடத்தில் தான் தற்போது வாடகை அடிப்படையில் இயங்கிவருகிறது.
முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்காக ஒதுக்கப்பட்ட நிலம், தற்போது இலங்கை இராணுவத்தின் 23வது படைப் பிரிவினரால் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
அந்த நிலத்தை 2026 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திற்குள் விடுவிப்பதாக இராணுவம் வாய்மொழி மூலம் உறுதி அளித்துள்ளது.
அதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் கூறியதைப்போல கடந்த 1986 இல் தயாரிக்கப்பட்ட கட்டிட வரைபடம் உள்ளது.
அந்த வரைபடத்திற்கு அனுமதியும் கிடைத்துள்ளது. எனவே, மிக விரைவில் இதனை விடுவித்து, புதிய கட்டிடம் அமைக்க எதிர்பார்த்துள்ளோம்.
அத்தோடு நாம் 2026 ஆம் ஆண்டில் மாத்திரம் இலங்கை முழுவதும் 18 புதிய கட்டிடங்கள் மற்றும் 211 அஞ்சல் நிலையத் திருத்தப் பணிகளைச் செய்வதற்கு நிதி ஒதுக்கீடு செய்துள்ளோம் என்பதைத் தெரிவித்துக்கெள்ள விரும்புகின்றேன்.
அதற்காக 1, 200 மில்லியன் ரூபாயைநிதியை ஒதுக்கீடு செய்துள்ளோம்.
மேலும் நாம் இந்த வருடமும், அடுத்த வருடமும் தொடர்ந்து அஞ்சல் நிலையங்களை அமைத்தல், புதிய கட்டிடங்களை அமைத்தல் மற்றும் பராமரிப்புப் பணிகளைச் செய்வோமென்பதையும் நாடாளுமன்ற உறுப்பினருக்குத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன்.
ஜூலை மாதத்தில் முள்ளியவளை அஞ்சல் அலுவலகத்திற்குரிய காணி விடுவிக்கப்பட்ட பின்னர், அடுத்த ஆண்டில் புதிய அஞ்சல் அலுவலகக் கட்டிடத்தை அமைப்பதுதொடர்பில் பரிசீலிக்கப்படுமெனத் தெரிவித்தார்.





