மீண்டும் மின் கட்டணம் அதிகரிக்க வாய்ப்பு? நாட்டின் சில பகுதிகளில் நேற்றும் மின் தடை

நாட்டின் சில பகுதிகளில் நேற்று (08) மீண்டும் மின்சாரத் தடை ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

உயர் அழுத்த மின் தடம் ஒன்று அறுந்து விழுந்ததன் காரணமாக கட்டுபொத்த, நாரம்மல, சியம்பலாகஸ்கொடுவ, கிரிஉல்ல, அலவ்வ மற்றும் பொல்கஹவெல ஆகிய பகுதிகளில் இவ்வாறு மின்  துண்டிப்பு ஏற்பட்டுள்ளது. 

தொழில்நுட்பக் குழுவினர் நேற்று இரவு முதல் திருத்தப் பணிகளை ஆரம்பித்துள்ளதாகவும், இன்று அதிகாலைக்குள் மின் விநியோகத்தை வழமைக்குக் கொண்டுவர முடியும் எனவும் அதிகாரிகள் தெரிவித்தனர். 

இதேவேளை, ‘நேஷனல் சிஸ்டம் ஓபரேட்டர் பிரைவேட் லிமிடெட்’ நிறுவனத்தினால் இந்த வருடத்தின் இரண்டாம் காலாண்டிற்காக முன்மொழியப்பட்டுள்ள மேலதிக மின்சாரக் கட்டண அதிகரிப்பு தொடர்பான கோரிக்கை குறித்து ஆராய்ந்து வருவதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மேலதிக ஆய்வுகளை மேற்கொண்டு, அடுத்த சில நாட்களில் ஆணைக்குழுவின் தீர்மானம் அறிவிக்கப்படும் என அதன் நிறுவன தொடர்பாடல் பணிப்பாளர் ஜெயநாத் ஹேரத் தெரிவித்தார். 

இரண்டாம் காலாண்டிற்காக கடந்த மார்ச் மாதம் 31ஆம் திகதி மின்சாரக் கட்டணத்தை 10 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு ஏற்கனவே அனுமதி வழங்கியிருந்தது.

இருப்பினும், தற்போதைய சூழ்நிலையில் மின் உற்பத்திக்காக செலவிடப்படும் செலவினங்களைக் கருத்திற்கொண்டு, ஏப்ரல் முதல் ஜூன் வரையான காலப்பகுதிக்குரிய மின்சாரக் கட்டணத்தை மேலும் 15 சதவீதத்தால் அதிகரிக்குமாறு தேசிய அமைப்பு கட்டுப்பாட்டு நிறுவனத்தினால் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply