அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் (GMOA) முன்னெடுத்துள்ள 48 மணி நேர அடையாளப் பணிப்பகிஷ்கரிப்பு காரணமாக, கிண்ணியா தள வைத்தியசாலையின் செயற்பாடுகள் ஸ்தம்பிதமடைந்ததுடன், சிகிச்சைகளுக்காக வருகை தந்த நோயாளர்கள் பாரிய அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.
முன்விசாரணைகள் இன்றி, சட்டவிரோதமான முறையில் மற்றும் அரசியல் உள்நோக்கங்களுடன் வைத்தியர்களுக்கு இடமாற்றங்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் குற்றம்சாட்டியே இந்த நாடளாவிய ரீதியிலான போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று (09) காலை 8:00 மணிக்கு ஆரம்பமான இந்தப் போராட்டத்தினால், கிண்ணியா தள வைத்தியசாலையின், வெளி நோயாளர் பிரிவு (OPD),
கிளினிக் பிரிவுகள் எவ்வித வைத்திய சேவைகளுமின்றி முடங்கிக் காணப்பட்டன.
இதன் காரணமாக, தூர இடங்களில் இருந்து பெரும் சிரமங்களுக்கு மத்தியில் வருகை தந்த பல நோயாளர்கள், வைத்தியர்கள் பணியில் இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை காணமுடிந்தது. இதன்போது அவர்கள் பல்வேறு தங்களுடைய கவலையை வெளிப்படுத்தியிருந்தனர்.
“வைத்தியசாலைகள் மக்களுக்காகவே உள்ளன. எமது வரிப்பணத்தில் படிக்கும் வைத்தியர்களை, எமக்குச் சேவை செய்யவே அரசாங்கம் நியமித்துள்ளது. ஆனால், அடிக்கடி நடக்கும் இந்தப் போராட்டங்களால் பாதிக்கப்படுவது என்னவோ ஏழை நோயாளர்கள்தான். தயவுசெய்து எமது உயிரோடு விளையாடாதீர்கள்; ஏழைகளின் வயிற்றில் அடிக்காதீர்கள்!” என சிகிச்சைக்காக காத்திருந்த நோயாளர்கள் வேதனையுடன் தெரிவித்தனர்.
பணிப்பகிஷ்கரிப்பு இடம்பெற்ற போதிலும், நோயாளர்களின் உயிர் பாதுகாப்பைக் கருத்திற்கொண்டு சில அத்தியாவசிய சேவைகள் மாத்திரம் வழக்கம் போல் இயங்கின.
இன்று (9)காலை ஆரம்பமான இந்தப் போராட்டம் நாளை மறுதினம் (ஏப்ரல் 11) காலை 8:00 மணி வரை நீடிக்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.





