முன்னாள் கிரிக்கெட் அணித்தலைவர் குமார் சங்கக்கார பாரிய முதலீட்டு வாய்ப்பொன்றை பரிந்துரைப்பதாக சமூக ஊடகங்களில் பரவி வரும் காணொளி போலியானது என பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Factcrescendo எனும் உண்மை கண்டறியும் இணையதளம் இது தொடர்பில் முன்னெடுத்த விசாரணையில், குறித்த காணொளி மற்றும் அதனுடன் தொடர்புடைய செய்திகள் ஒரு திட்டமிடப்பட்ட இணைய மோசடியின் ஒரு பகுதி என்பதை உறுதிப்படுத்தியுள்ளது.
உள்ளூர் ஊடக இணையதளம் ஒன்றின் வடிவமைப்பை ஒத்த வகையில் தயாரிக்கப்பட்ட இவ்வாறான ஒரு போலிச் செய்தியில், குமார் சங்கக்கார மற்றும் பிரபல வர்த்தகர் ஒதாரா குணவர்தன ஆகியோர் இவ்வாறான முதலீட்டுத் திட்டங்களுடன் தொடர்புடையவர்கள் எனப் பொய்யாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.
தற்போது இந்த செய்திகள் நீக்கப்பட்டு அல்லது மாற்றப்பட்டு, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பெயரையும் இதனுடன் தொடர்புபடுத்தி வேறு போலித் தகவல்கள் பரப்பப்பட்டு வருகின்றன.
இவை முற்றாக மோசடியானவை என உறுதிப்படுத்தியுள்ள இலங்கை கணனி அவசரப் பிரதிபலிப்புத் தளம் , இது குறித்து அவதானமாக இருக்குமாறு பொதுமக்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
சைபர் பாதுகாப்பு நிபுணர் அசேல வைத்தியலங்கார இது குறித்து விளக்குகையில், இவ்வாறான மோசடிகள் உண்மையானவை என நம்பவைக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன என்றும், இதன் மூலம் தனிப்பட்ட தரவுகள் அல்லது பேஸ்புக் கணக்குகளின் விபரங்களைத் திருடும் அபாயம் உள்ளதாகவும் எச்சரித்துள்ளார்.





