புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தினரின் வேண்டுகோளுக்கிணங்க தீவகம் வாழ் மக்களின் உடல் நலனை கருத்திற் கொண்டு இரண்டாவது முறையாகவும் நவீன தொழில்நுட்பங்களுடன் அமைந்த ரூபா 97 இலட்சம் பெறுமதியான அல்ட்ரா சவுண்ட் ஸ்கனர் இயந்திரம் புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலைக்கு புங்குடுதீவு வ. பொ. கனகரத்தினம் அறக்கட்டளையினரால் வழங்கி வைக்கப்பட்டது.
சனிக்கிழமை காலை 9 மணியளவில் ஆரம்பமாகிய நிகழ்வின் விருந்தினர்களாக இலங்கையின் முன்னணி மகப்பேற்று வைத்திய நிபுணர் ந.சரவணபவா, வ.பொ. கனகரத்தினம் அறக்கட்டளையின் உறுப்பினர்களான கனகரத்தினம் ரகுநாதன், மகாலிங்கம் திருத்தணி ஈசன் , விஜிதா ஈசன், புங்குடுதீவு பிரதேச வைத்தியசாலை பிரதம வைத்தியர் C. தாரணி, வைத்தியர் பர்ஷாத் ஓய்வுநிலை பாடசாலை அதிபர் எஸ்.கே. சண்முகலிங்கம், நோயாளர் நலன்புரி சங்கத்தின் போசகர் பூராசா அன்பரசி, உப தலைவர் கருணாகரன் குணாளன், வேலணை பிரதேச சபை உப தவிசாளர் க. வசந்தகுமாரன், வேலணை பிரதேச சபை உறுப்பினர் கருணாகரன் நாவலன், பொது சுகாதார பரிசோதகர் வ. அபிராஜ், புங்குடுதீவு- நயினாதீவு பலநோக்கு கூட்டுறவு சங்க பொது முகாமையாளர் பொற்பாவை வெண்ணிலா உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
மேலும் இங்கு நடைபெற்ற விசேட மருத்துவ முகாமில் நெடுந்தீவு பிரதேசத்திலிருந்து வருகை தந்த பத்துக்கும் மேற்பட்ட கர்ப்பிணி தாய்மார்களும் பங்குபற்றியிருந்தனர்.
அத்துடன் சூழகம் அமைப்பின் செயலாளர் கருணாகரன் நாவலன் அவர்களின் ஏற்பாட்டில் மரநடுகையும் வைத்தியசாலையில் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.





