காரைநகர் கடலில் 12 இந்திய மீனவர்கள் கைது! – அத்துமீறிய இழுவைப்படகும் பறிமுதல்

யாழ். காரைநகரை அண்டிய இலங்கைக் கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுபட்ட 12 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

நேற்று இரவு முன்னெடுக்கப்பட்ட விசேட ரோந்து நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.

இந்தியாவின் காரைக்கால் பகுதியிலிருந்து மீன்பிடிக்கப் புறப்பட்ட மேற்படி மீனவர்கள், காரைநகர் கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து தொழிலில் ஈடுபட்டிருந்தனர். 

இதன்போது, அப்பகுதியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்த கடற்படையினர், இந்திய இழுவைப்படகுடன் 12 மீனவர்களையும் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் இன்று காலை காங்கேசன்துறை துறைமுகத்துக்கு அழைத்து வரப்பட்டனர். அதனைத் தொடர்ந்து அவர்களை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ். மாவட்ட கடற்றொழில் நீரியல்வளத் திணைக்கள அதிகாரிகளிடம் கையளிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள் மேற்படி மீனவர்களின் விவரங்களைப் பதிவு செய்த பின்னர், அவர்களை ஊர்காவற்றுறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்ப்படுத்த நடவடிக்கை எடுப்பார்கள்.

வடக்குக் கடலில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்கள் மீண்டும் அதிகரித்து வரும் நிலையில், கடற்படையினர் தமது கண்காணிப்பு நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply