ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்களை எவ்வாறு ஏமாற்றுவார்கள் என்பதை அனைவரும் உணர்ந்துகொள்ளவேண்டும் என அகில இலங்கை பட்டதாரிகள் ஒன்றியத்தின் தலைவர் கணேசன் அனிரன் தெரிவித்தார்.
இது ஒரு மாத காலத்துக்குள் விரைவாக நான் ஜனாதிபதி என்கின்ற அடிப்படையில் உங்களுக்கு வாக்குறுதி தருகின்றேன். இதை மிக விரைவாக நாங்கள் நடைமுறைப்படுத்தித் தருவோம்’ என்று கூறினார். ஆனால் இன்று வரைக்கும்; ஜனாதிபதி அவர்களால் தரப்பட்ட முதலாவது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து நாங்கள் மிகக் கவலையடைகின்றோம் எனவும் இதன்போது தெரிவித்தார்.
இன்று மட்டு.ஊடக அமையத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் அவர் இதனை தெரிவித்தார்.இதன்போது கருத்து தெரிவித்த அவர்,
“அகில இலங்கை பட்டதாரி ஒன்றியத்தினுடைய தலைவர். இன்று வாக்குறுதியினை மீறியிருக்கின்ற அரசாங்கம் இது தொடர்பாகவே நாங்கள் இன்று இந்த மட்டக்களப்பு ஊடக மையத்தில் ஒரு ஊடகச் சந்திப்பினை பட்டதாரி ஒன்றியம் சார்ந்து ஏற்பாடு செய்திருக்கின்றோம். ‘வாக்குறுதியினை மீறி அரசாங்கம்’ என்கின்ற இந்த தலைப்பிலேதான் இன்றைய இந்த ஊடகச் சந்திப்பினை ஏற்பாடு செய்திருக்கின்றோம்.
அதாவது, அனைவருக்கும் தெரியும் கடந்த ஆறு வருடங்களாக அபிவிருத்தி உத்தியோகத்தர்களாக இணைக்கப்பட்டு ஆசிரியப் பணியினை ஆற்றிக்கொண்டு வருகின்ற இந்த பட்டதாரிகள், அவர்களுடைய நிரந்தர நியமனம் தொடர்பாக கடந்த ஆறு வருடங்கள் தொடர்ச்சியான முறையில் பல போராட்டங்கள், பல ஆர்ப்பாட்டங்களை நிகழ்த்திக்கொண்டு வருகின்றார்கள். அதன் அடிப்படையில் தற்போது இருக்கின்ற அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு, முதலாம் மாதம் 26 ஆம் திகதி கொழும்பு ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக தீர்வு கிடைக்கும் வரையும் உண்ணாவிரதம் என்கின்ற அடிப்படையில் இந்த உண்ணாவிரதப் போராட்டத்தினை நடாத்தி இருந்தோம்.
அதன் அடிப்படையில் ஐந்தாம் நாள் நிறைவுற்றதன் பிற்பாடு ஜனாதிபதியினுடைய செயலாளரால் எங்களுக்கு ஜனாதிபதியோடு எமது விடயம் தொடர்பான ஒரு கலந்துரையாடலுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. அதன் அடிப்படையில் அந்த கலந்துரையாடலில் பட்டதாரி ஒன்றியம் சார்ந்தும், பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடைய முக்கிய நிர்வாக உத்தியோகத்தர்கள் சார்ந்தும் நாங்கள் அந்த கலந்துரையாடலில் – கிட்டத்தட்ட இரண்டரை மணித்தியாலங்கள் ஜனாதிபதிக்கும் எங்களுக்கும் இடையிலே கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
அந்த கலந்துரையாடலின் போது எமது நாட்டினுடைய கௌரவ ஜனாதிபதி அவர்கள் பல விடயங்களை, பல வாக்குறுதிகளைத் தந்திருந்ததோடு மாத்திரமல்லாமல், கடந்த ஆறு வருடங்களாக தீர்வு ஒன்று கிடைக்கப்பெறாத எமது பிரச்சினைக்கு தீர்வு ஒன்றினையும் வாக்குறுதி வாயிலாகத் தந்திருந்தார். ஆனால் எந்த ஒரு ஆவணங்களும் இதனூடாக எங்களுக்குத் தரப்படவில்லை. அந்த வாக்குறுதிகள் இன்று வரை நிறைவேற்றப்படாமல் இருக்கின்றமை உண்மையில் ஒரு படித்த சமூகம், அதே வேளை இந்த நாட்டிலே ஒரு முக்கியமான இடத்தில் பதிவு செய்யப்பட்ட சங்கம் என்கின்ற அடிப்படையில் கூட நாங்கள் இதனை உண்மையில் ஒரு கவலைக்குரிய விடயமாக நாங்கள் பார்க்கின்றோம்.
அன்றைய அந்த இரண்டரை மணித்தியாலங்கள் இடம்பெற்ற அந்த கலந்துரையாடலிலே எமது பிரச்சினைக்கான தீர்வுகள் – மூன்று தீர்வுகள் எமது நாட்டினுடைய ஜனாதிபதி அவர்களால் முன்வைக்கப்பட்டது. அதாவது முதலாவது வாக்குறுதி: ஒரு மாத காலத்துக்குள் உங்களுக்குத் தெரியும் நாங்கள் ஏற்கனவே இந்த ஊடக சந்திப்பின் போது இது தொடர்பாகக் கதைத்திருக்கின்றோம் பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஆசிரியர்களாகப் பணியாற்றி இருந்தாலும், அவர்களுடைய பதவி நியமனம் ‘அபிவிருத்தி உத்தியோகத்தர்’களாக இருக்கும் அதேவேளை, அவர்களுடைய பணிநேரம் எட்டு மணித்தியாலங்கள் இருக்கும்.
அதாவது, 7:30 மணிக்கு அவர்கள் பாடசாலைக்குச் சென்று 3:15 மணி வரையும் பாடசாலைகளில் தங்கியிருந்ததன் பிற்பாடே வீடு செல்ல வேண்டும். இதுதான் அவர்களுடைய பணிநேரம். இதில் பல சவால்களை அவர்கள் எதிர்நோக்கி இருந்தார்கள். குறிப்பாக பாடசாலைத் தவணைப் பரீட்சையினுடைய விடுமுறை காலங்களின் போது ஒவ்வொரு பெண் உத்தியோகத்தர்கள், ஒவ்வொரு பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் பல சவால்களை எதிர்கொண்டு அவர்களுடைய இந்தப் பணியினை ஆற்றி, இந்த எட்டு மணித்தியால பணிநேரத்தினையும் கடந்து வீட்டுக்கு வருகின்றார்கள்.
இது தொடர்பாக முதன் முதலில் நாங்கள் ஜனாதிபதி அவர்களிடம் கூறியபோது, அவர் கூறியிருந்த விடயம்: ஒரு மாத காலத்திற்குள் இவர்களுக்கு ஆசிரியர்களுக்கு வழங்கப்படுகின்ற அந்தச் சலுகை – அதாவது 7:30 மணிக்கு அவர்கள் பாடசாலை செல்வார்களாக இருந்தால் 1:30 மணிக்கு அவர்கள் வீடு திரும்பலாம். அதேவேளை விடுமுறை காலங்களில் அவர்கள் பாடசாலைக்குச் செல்ல வேண்டிய அவசியமில்லை. இது தொடர்பாக ஜனாதிபதியினுடைய செயலாளரோடு இந்த விடயம் தொடர்பாகக் கதைத்து, ஒரு மாத காலத்திற்குள் இந்தச் சுற்றுநிருபத்தினை நாங்கள் வெளியிடுவதோடு மாத்திரமல்லாமல், இந்த விடயத்தினை நாங்கள் மிக விரைவாக நடைமுறைக்குக் கொண்டு வருவோம் என்கின்ற அந்த வாக்குறுதி வழங்கப்பட்டிருந்தது.
இது தொடர்பாக நாங்கள் ஜனாதிபதி செயலாளரோடு தொடர்ச்சியான முறையில் பேசிக்கொண்டிருந்தோம், பேசியிருந்தோம். இந்தச் சுற்றுநிருபம் எப்போது வெளியாகும், எப்போது வெளிப்படுத்தப்படும் என்கின்ற அடிப்படையில் கூறியிருந்தோம். ஆனால் அந்த விடயத்தில் இதுவரைக்கும் எமது நாட்டினுடைய கௌரவ ஜனாதிபதி அவர்களோடு கலந்துரையாடலை மேற்கொண்டு கிட்டத்தட்ட இரண்டரை மாதங்கள், மூன்று மாதங்களைக் கடந்துள்ள நேரத்திலும் இன்னும் அந்தச் சுற்றுநிருபம் வெளியிடப்படவில்லை; அதேவேளை அந்த வாக்குறுதி கூட நிறைவேற்றப்படவில்லை.
உண்மையில் நாட்டின் ஜனாதிபதி என்கின்ற அடிப்படையிலும் எமது நாட்டின் ஆட்சிக்கு வந்தவர் என்கின்ற அடிப்படையிலும் அவருடைய அந்த வாக்குறுதியினை நாங்கள் அன்று நம்பியிருந்தோம். அதன் போது இந்த கலந்துரையாடல் இடம்பெற்ற போது கௌரவ ஜனாதிபதி அவர்களிடம் நான் கேட்டிருந்தேன்: ‘இந்த வாக்குறுதிகள் வாக்குறுதிகளாகவே இருக்கின்றன, இதற்குரிய ஆதாரங்களோ எழுத்து மூலமான அறிக்கைகளோ எங்களுக்குக் கிடைக்கப்பெறவில்லை. இது நிறைவேற்றப்படுமா?’ என்கின்ற வினாவினை நான் தொடுத்திருந்தேன்.
அப்போது எமது நாட்டு ஜனாதிபதி அவர்கள் கூறியது: ‘கட்டாயம் இது ஒரு மாத காலத்துக்குள் விரைவாக நான் ஜனாதிபதி என்கின்ற அடிப்படையில் உங்களுக்கு வாக்குறுதி தருகின்றேன். இதை மிக விரைவாக நாங்கள் நடைமுறைப்படுத்தித் தருவோம்’ என்று கூறினார். ஆனால் இன்று வரைக்கும் அது நாட்டின் ஜனாதிபதி அவர்களால் தரப்பட்ட முதலாவது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பது குறித்து நாங்கள் மிகக் கவலையடைகின்றோம்.
அதன் அடிப்படையில் நாங்கள் உற்றுப் பார்க்கின்றபோது, இந்த முதலாவது வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை என்பதால் அடுத்தடுத்து தரப்பட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பதுதான் எங்களுடைய சந்தேகம். காரணம் என்னவென்று சொன்னால், எங்களோடு பேச்சுவார்த்தை இடம்பெற்றதன் பிற்பாடு அடுத்த நாளே போட்டிப் பரீட்சைக்கான விண்ணப்பத்திற்குரிய வர்த்தமானி வெளியிடப்பட்டிருந்தது. அந்த வர்த்தமானி எமது நாட்டின் பிரதமர், எமது நாட்டின் கௌரவ ஜனாதிபதி அவர்கள் வர்த்தமானி தொடர்பாகப் பாராளுமன்றத்திலும் மாத்திரமல்ல, ஊடகத்திற்குக்கூட உரையாற்றுகின்ற போது: ‘திறந்த போட்டிப் பரீட்சை, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என்கின்ற அடிப்படையில் இரண்டு போட்டிப் பரீட்சைகள் இடம்பெறும்’ என்று கூறியிருந்தார்.
ஆனால் அதில் கூட தற்போதைய அரசாங்கம் ஒரு தவறிழைத்திருக்கின்றது, வாக்குறுதியினை மீறியிருக்கின்றது. காரணம் என்னவென்று சொன்னால், திறந்த போட்டிப் பரீட்சை வேலையற்ற பட்டதாரிகளுக்கும், பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மற்றும் ஏனைய திணைக்களங்களில் பணியாற்றுகின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களை உள்வாங்குவதற்கு மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என்கின்ற அடிப்படையிலும் இரண்டு விதமான அந்தப் போட்டிப் பரீட்சைகளை நடாத்தி ஆசிரியர் சேவைக்குள் உள்வாங்கப்படுவோம் என்கின்ற அடிப்படையில் பல ஊடகங்களில் மாத்திரமல்ல, பாராளுமன்றத்தில் கூட இந்த வாக்குறுதிகளைக் கூறியிருந்தார்கள். ஆனால் இன்று, மட்டுப்படுத்தப்பட்ட போட்டிப் பரீட்சை என்றல்லாமல் அனைவரையும் ஒன்றிணைத்து, திறந்த போட்டிப் பரீட்சையாக மாற்றி இருக்கின்றார்கள். உண்மையில் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படாமல், வாக்குறுதிகளைக் கூறுவது பெரிய விடயமல்ல.
ஆனாலும் நாட்டின் ஒரு முக்கியமான ஆட்சியாளர்களாக இருந்து, பொய்யான வாக்குறுதிகளைக் கூறி, படித்த எங்களையே இவ்வாறு ஏமாற்றுகிறார்கள் என்று சொன்னால், இந்த நாட்டிலே படிக்காத பாமர மக்கள் எத்தனையோ பேர் இருக்கின்றார்கள். அப்போது தேர்தல் காலங்களின் போது தேர்தல் விஞ்ஞாபனங்களில் கூறப்பட்டிருக்கின்ற அந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா? படித்தவர்களுக்கு இப்படியான ஒரு நிலை என்றால், தற்போது நாட்டினுடைய அரசாங்கத்தினால் படித்தவர்களுக்கு இப்படியான ஒரு நிலை என்று சொல்லிச் சொன்னால், படிக்காதவர்கள், ஏழை மக்கள் எவ்வளவோ பிரச்சனைகள் இருக்கின்றது, எவ்வளவோ வாக்குறுதிகள் வழங்கப்பட்டிருக்கின்றது அரசாங்கத்தினால். அப்ப அப்படியான வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா என்பது எங்களுடைய ஒரு கேள்விக்குறியாக இருக்கின்றது.
எனவே, இது தொடர்பாக எமது நாட்டினுடைய ஜனாதிபதி அவர்களுக்கு கடந்த மாதம் இந்த விடயங்களை முன்னிறுத்தி கடிதம் ஒன்று அனுப்பியிருந்தேன். இதுவரைக்கும் அந்த கடிதத்திற்குரிய பதில் கிடைக்கப்பெறவில்லை. ஆனாலும் எமது நாட்டினுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்தபோது கூறியிருக்கின்ற விடயங்கள், அலுவலகம் சார்ந்து கூறியிருக்கின்ற விடயங்களில் ஒன்று—ஒரு கடிதம் அனுப்பப்பட்டால் அதற்கு 14 நாட்களுக்குள் பதில் அனுப்பப்பட வேண்டும் என்பது ஒரு கட்டாயப்பாடாக இருந்திருந்தது. ஆனால் இன்று வரை எங்களால் பதிவு செய்யப்பட்ட அகில இலங்கை பட்டதாரி ஒன்றியத்தினால் அனுப்பப்பட்ட அந்த கடிதத்திற்கு இது தொடர்பான பதில்கள் வழங்கப்படவில்லை.
இது தொடர்பாக மீண்டும் மீண்டும் ஜனாதிபதியினுடைய செயலாளர் மற்றும் இது குறித்த முக்கியமானவர்களோடு பேசுகின்ற போது, உண்மையில் எங்களைச் சுற்றி விடுவது போன்றுதான் அவர்களுடைய பதில்கள் அமையப்பெற்றிருக்கின்றது. இது உண்மையில் எங்களை அன்றைய உண்ணாவிரதத்திலிருந்து எழுப்ப வேண்டும், அதேவேளை எங்களுக்குரிய பொய்யான வாக்குறுதிகளைத் தந்து… ஏனென்று சொன்னால் அந்த உண்ணாவிரதம் நாடளாவிய ரீதியாக மாத்திரமல்ல உலகளாவிய ரீதியாகப் பேசப்பட்ட ஒரு விடயம். ஒரு தமிழனாக இருந்து அந்த உண்ணாவிரதத்தில் நான் இருந்திருந்தேன். இது பெரிய மட்டத்தில் உலகளாவிய ரீதியாகப் பேசப்பட்ட விடயம் என்பதனால், தங்களுடைய ஆட்சிக்கு ஏதேனும் நேர்ந்துவிடுமோ என்பதற்கு அஞ்சியோ இந்த பொய்யான வாக்குறுதிகளைத் தந்ததோடு மாத்திரமல்லாமல், அரசாங்கம் தங்களுடைய ராஜதந்திர முறைகளைப் பயன்படுத்தி எங்களை உண்மையில் ஏமாற்றி இருக்கின்றது.
ஒன்றையே நாங்கள் கூறிக்கொள்கின்றோம். இந்த ஏமாற்றம் என்பது எங்களை ஏமாற்றித் தாங்கள் வெற்றி கண்டு, பாடசாலைகளில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு பொதுவாக—அதாவது இந்த ஐந்தாம் மாதம் 24-ஆம் திகதி போட்டிப் பரீட்சை இடம்பெறப் போவதாக அவர்களுடைய அந்த நாட்குறிப்பேட்டில் வெளிப்படுத்தி இருக்கின்றார்கள். அவ்வாறு எங்களை ஏமாற்றி இந்தப் போட்டிப் பரீட்சை ஒன்றினை வைத்து பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கு அநீதி இழைக்கலாம்.
ஆனாலும் இந்த அநீதி எதிர்வருகின்ற தேர்தல் காலங்களில் மாத்திரமல்ல, மற்ற மற்ற விடயங்கள் சார்ந்தும் பிரதிபலிக்கும் என்பதில் எந்த மாற்றமும் இல்லை. ஆனாலும் எங்களுடைய போராட்டம், அரசு எங்களுக்கு இழைத்த அந்த அநீதி—அதாவது இதற்கு முன்னரும் பல பேர் இந்த நாட்டை ஆண்டு கடந்த கடந்த அரசாங்கங்கள் இந்த நாட்டிலே இருந்து ஆட்சி செய்திட்டுப் போயிருந்தாலும், தற்போதைய அரசாங்கம் உண்மையாகவே வெளிப்படையாக பொய்யான வாக்குறுதியினைத் தந்து ஏமாற்றி இருக்கின்றமை உண்மையில் எங்களுக்கு ஒரு பாரிய கவலையாக இருக்கின்றது.
இன்னொரு விடயம், இந்த சமூகத்திற்கு மாத்திரமல்ல, சமூக வலைத்தளங்களுக்கு மாத்திரமல்ல, படித்த பலருக்கு ஒரு விடயத்தை நான் தெளிவுபடுத்த விரும்புகின்றேன். ஏனென்று சொல்லிச் சொன்னால் எங்கள்குறித்து—பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் குறித்து ஒரு விடயம் நிலவுகின்றது. இவர்களுக்கு பரீட்சை எழுதுவதற்கு பயமா என்கிற ஒரு விடயத்தைக் கேட்டுக்கொண்டிருக்கின்றார்கள். உண்மையில் பரீட்சை எழுதுவதற்கு பாடசாலையில் இணைக்கப்பட்டிருக்கின்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் ஒருவருக்கும் பயமில்லை. காரணம் இலங்கையில் இருக்கின்ற கல்வி முறை பரீட்சையை மையப்படுத்திய கல்வி முறை. எத்தனையோ பரீட்சைகளைத் தாண்டித்தான் பல்கலைக்கழகம் சென்று பட்டம் முடித்து வந்திருக்கின்றவர்கள். அப்படிப்பட்டவர்களுக்கு பரீட்சை என்பது பயமில்லை.
மாறாக நான் ஒரு கேள்வி கேட்கின்றேன். என்னவென்று சொல்லிச் சொன்னால், போட்டிப் பரீட்சையிலே சித்தியடைவதற்குரிய புள்ளியினை எடுத்தால் அனைவருக்கும் இந்த அரசாங்கம் நியமனம் கொடுக்குமா? அவ்வாறு அந்த அரசாங்கம் இந்த நியமனம் கொடுக்குமாக இருந்தால், சித்திப் புள்ளியினை எட்டியிருக்கின்ற அனைத்து பட்டதாரிகளுக்கும், அனைத்து அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கும் இந்த அரசாங்கம் நியமனம் கொடுக்குமாக இருந்தால் எங்களுடைய போராட்டங்கள் அனைத்தையும் இந்த இடத்தில் நாங்கள் கைவிடுவோம்.
மாறாக, போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக ஓர் ஆசிரியர் நியமனத்தினைத் தீர்மானிப்பது புள்ளியல்ல் அவர்களுடைய பாடம், அவர்களுடைய பாடத்திற்கு இருக்கின்ற வெற்றிடம், அந்த வெற்றிடத்திற்கு விண்ணப்பித்திருக்கின்ற விண்ணப்பதாரர்கள்—இந்த மூன்று விடயமுமே ஓர் ஆசிரியர் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக ஆசிரியர் நியமனத்தைப் பெறுவதற்கு சவாலாக இருக்கின்ற விடயங்கள். இதனை விளங்கிக் கொள்ள வேண்டும்.
அப்படிப் போட்டிப் பரீட்சை ஒன்றின் ஊடாக நாங்கள் ஆசிரியர் நியமனத்திற்கு வரவேண்டுமாக இருந்தால், நாடளாவிய ரீதியாக ஆசிரியர் வெற்றிடம் நிலவியபோது எங்களை ஒரு பகடைக்காய்களாக கடந்த கடந்த அரசாங்கங்கள் பயன்படுத்தி இருந்தன. தற்போதைய அரசாங்கம் எங்களுக்கான சரியான ஒரு தீர்வை—சட்டங்கள் இருந்தாலும் பாதிக்கப்பட்ட தரப்பு என்கின்ற அடிப்படையில் எங்களுக்கு ஒரு சரியான தீர்வைத் தரும் என்ற நோக்கத்தோடு நாங்கள் இந்த அரசாங்கத்திற்கு வாக்களித்திருந்தோம், இந்த அரசாங்கத்தை நாட்டுக்கு ஆட்சியாளர்களாக நாங்கள் கொண்டு வந்திருந்தோம். ஆனால் ஆட்சிக்கு வருவதற்கு முன்னர் இருந்த அரசாங்கம், ஆட்சிக்கு வந்ததன் பிற்பாடு இவ்வாறான செயற்பாடுகளில் ஈடுபட்டிருக்கின்றது.
எனவே தற்போதைய அரசாங்கத்திடம் நாங்கள் கூறுகின்ற ஒரேயொரு விடயம், எங்களுக்குத் தரப்பட்ட—அதாவது நேரடியாக நாட்டின் ஜனாதிபதி அவர்களால் தரப்பட்ட வாக்குறுதி நிறைவேற்றப்படாமை குறித்து நாங்கள் மிகவும் மனவருத்தமடைகின்றோம், கவலையடைகின்றோம். எனவே இந்தப் பரீட்சை இடம்பெறுவதற்கு முன்பதாக, முதன்முதல் கூறிய எங்களுக்கு வழங்கப்பட்ட—அதாவது நேரமாற்றம் தொடர்பாக வழங்கப்பட்ட இந்த வாக்குறுதியை நிறைவேற்றித் தர வேண்டும். அப்படி இல்லையென்றால் இது தொடர்பான போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் இன்னும் பல வியூகங்களில் இடம்பெறும் எனவும் இதன்போது தெரிவித்தார்.





