யாழ்ப்பாணம் – வடமராட்சி, கிழக்கு நாகர்கோவில் கடற்பரப்பில், எல்லை தாண்டி வந்த இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட தொழில் முறைகளில் ஈடுபடுவதாகவும், இதனைத் தடுப்பதில் கடற்படையினர் மெத்தனப் போக்குடன் செயற்படுவதாகவும் உள்ளூர் மீனவர்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.
நேற்று முன்தினம் நாகர்கோவில் கிழக்கு திசையில், கரையில் இருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் இந்திய மீனவர்கள் அத்துமீறி நுழைந்துள்ளனர்.
இவர்கள் இந்தியப் பகுதிகளில் பயன்படுத்தப்படும் ‘குல்லா’ எனப்படும் படகுகளில் வந்து, இலங்கைக் கடற்பரப்பில் தடைசெய்யப்பட்ட ‘லாம்பு’ (Light Course) மீன்பிடி தொழிலில் ஈடுபட்டதை எமது பகுதி மீனவர்கள் நேரில் கண்டுள்ளனர்.
இதனை உறுதிப்படுத்தும் வகையில், அப்பகுதியில் தொழிலில் ஈடுபட்டிருந்த உள்ளூர் மீனவர்கள் இந்திய மீனவர்களின் அத்துமீறலைத் தமது கையடக்கத் தொலைபேசிகள் மூலம் காணொளிப் பதிவாக எடுத்து வெளியிட்டுள்ளனர்.
இச்சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்துள்ள வடமராட்சி மீனவர்கள்,
“நாங்கள் எமது கடற்பரப்பில் வாழ்வாதாரத்திற்காகத் தொழில் செய்யும்போது, சிறிய விதிமீறல்களைக் காரணம் காட்டி கடற்படையினர் எங்களைக் கைது செய்கிறார்கள். ஆனால், எல்லை தாண்டி வந்து எமது வளங்களைச் சூறையாடும் இந்திய மீனவர்களைக் கடற்படையினர் வேடிக்கை பார்க்கிறார்கள்,” என அவர்கள் வேதனை தெரிவித்துள்ளனர்.
சூழலியல் பாதிப்புகளை ஏற்படுத்தும் ‘லாம்பு’ மீன்பிடி முறை இலங்கையில் தடை செய்யப்பட்டுள்ளது. இவ்வாறான முறைகளால் எமது கடல் வளங்கள் முற்றாக அழிந்து போகும் அபாயம் உள்ளதாக மீனவர்கள் எச்சரிக்கின்றனர்.
இந்திய மீனவர்களின் தொடர்ச்சியான வருகையினால் உள்ளூர் மீனவர்களின் வலைகள் சேதமாக்கப்படுவதோடு, அவர்களது வாழ்வாதாரமும் கேள்விக்குறியாகியுள்ளது.
இலங்கைக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீனவர்களைக் கட்டுப்படுத்தவும், தடைசெய்யப்பட்ட மீன்பிடி முறைகளைத் தடுத்து நிறுத்தவும் உரிய தரப்பினர் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என வடமராட்சி கிழக்கு மீனவ சங்கங்கள் கோரிக்கை விடுத்துள்ளன.






