திருகோணமலை, சம்பூர் வெளிச்சவீடு (Foul Point) கடற்பரப்பில் நண்பர்களுடன் நீராடச் சென்ற
இளைஞர் ஒருவர் அலையில் இழுத்துச் செல்லப்பட்டு உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
மூதூர், ஹைரியா நகர் பகுதியைச் சேர்ந்த 19 வயதுடைய எஸ்.எம். அப்லல் என்ற இளைஞரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
நேற்று பிற்பகல் 3:40 மணியளவில், குறித்த இளைஞர் தனது நண்பர்களுடன் இணைந்து சம்பூர் வெளிச்சவீட்டுப் பகுதியில் கடலில் நீராடிக்கொண்டிருந்தார். இதன்போது எதிர்பாராத விதமாக பலத்த அலையினால் அவர் கடலுக்குள் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்.
இளைஞன் நீரில் மூழ்கி காணாமல் போனதை அடுத்து, அங்கிருந்த பொதுமக்கள் மற்றும் கடற்படையினர் இணைந்து துரித தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர். நீண்ட நேரத் தேடுதலின் பின்னர் இளைஞன் சடலமாக மீட்கப்பட்டார்.
மீட்கப்பட்ட இளைஞனின் சடலம் தற்போது பிரேத பரிசோதனைகளுக்காக மூதூர் தள வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை சம்பூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
சித்திரை புத்தாண்டு விடுமுறையை முன்னிட்டு சுற்றுலா சென்ற இடத்தில் நிகழ்ந்த இந்த உயிரிழப்பு, உயிரிழந்த இளைஞனின் கிராமத்தில் ஆழ்ந்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.





