கந்தளாயில் கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் முற்றுகை – தப்பியோடிய சந்தேகநபர்கள்

கந்தளாய் – குளத்துப்பகுதியைச் சேர்ந்த யானைக்கல் பகுதியில் சட்டவிரோதமாக முன்னெடுக்கப்பட்டு வந்த கள்ளச்சாராய உற்பத்தி நிலையம் ஒன்றை கந்தளாய் பொலிஸார் நேற்று மாலை முற்றுகையிட்டுள்ளனர்.

கந்தளாய் தலைமையகப் பொலிஸ் பொறுப்பதிகாரி லக்மல் விஜேவர்தன வழிகாட்டலில், பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து இந்த சுற்றிவளைப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது, கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காகப் பயன்படுத்தப்பட்ட ஐந்து பரல் ‘கோடா’களும், காய்ச்சுவதற்குத் தேவையான உபகரணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைப்பற்றப்பட்ட பொருட்களின் மொத்த பெறுமதி சுமார் ஐந்து இலட்சம் ரூபாவுக்கு மேல் என மதிப்பிடப்பட்டுள்ளது.

குறித்த பகுதி பொலிஸாரினால் சுற்றிவளைக்கப்பட்ட போது அங்கிருந்த சந்தேக நபர்கள் தப்பியோடியுள்ளதாகத் தெரியவருகிறது. 

தப்பியோடியவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply