ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைய முயன்ற மக்கள்! கொழும்பில் பதற்றம்

இலங்கையின் வரலாற்றின் மிக மோசமான பொருளாதார நெருக்கடி காரணமாக ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பினால் கடும் சீற்றம் நிலவுகின்ற நிலையில் இன்று பெருமளவு மக்கள் ஜனாதிபதியின் அலுவலகத்திற்குள் நுழைய முற்பட்டனர்.

அத்துடன், ஆர்ப்பாட்டக்காரர்கள் பிரேதப் பெட்டியை ஜனாதிபதி செயலகத்துக்குள் எறிய முற்பட்டனர்.

மருந்து, உணவு மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலைகள் தென்னாசிய நாட்டில் வியப்பளிக்கும் வகையில் அதிகரித்துள்ளன. பெற்றோல் நிரப்பும் நிலையங்களிற்கு வெளியே பெருமளவு மக்கள் நீண்ட வரிசைகளில் காணப்படுகின்றனர். நீண்டநேர நாளாந்த மின்வெட்டுகள் வழமையான விடயமாக மாறிவிட்டன.

கடுமையான அந்நியசெலாவணி பற்றாக்குறை வர்த்தகர்கள் இறக்குமதிகளிற்காக பல மாதங்களாக கட்டணங்களை செலுத்த முடியாத நிலையை ஏற்படுத்தியுள்ளது.

மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வை காண்பதற்காக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள சர்வதேச நாணயநிதியத்;தின் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளார்.

இந்த சந்திப்பு இடம்பெற்று சிறிது நேரத்தின் பின்னர் கொழும்பின் நகரங்களை ஆர்ப்பாட்டக்காரர்கள் முடக்கினர்.

எதிர்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியினால் அணிதிரட்டப்பட்ட மக்கள் ஜனாதிபதி செயலகத்தை சுற்றிவளைத்தனர். அந்த கட்டடத்திற்குள் நுழைவதற்கு அவர்கள் மேற்கொண்ட முயற்சிகளை பொலிஸார் தடுத்துநிறுத்தினர்.

சாதாரண மக்கள் எதிர்கொள்ளும் முன்னொருபோதும் இல்லாத பொருளாதார பிரச்சினைகளிற்கு தீர்வை காணமுடியாவிட்டால் ஜனாதிபதி ராஜபக்ச வீட்டிற்கு செல்லவேண்டும் என தெரிவிப்பதற்காகவே இந்த மக்கள் வந்தனர் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்ணான்டோ தெரிவித்தார்.

Leave a Reply