புத்தளம் மாவட்டத்தின் வனாத்தவில்லுவ பகுதியில் உள்ள மங்களபுர ஏரியில் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தோணியில் சென்ற மூன்று பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸார் தெரிவித்ததாவது, ஐந்து பாடசாலை மாணவர்கள் தாமரை மலர்களைப் பறிப்பதற்காக தோணியில் ஏரிக்குள் சென்றிருந்தனர். அப்போது எதிர்பாராத விதமாக தோணி தலைகீழாகக் கவிழ்ந்ததால், மாணவர்கள் அனைவரும் நீரில் மூழ்கியுள்ளனர்.
சம்பவத்தின் போது ஒருவரை பொதுமக்கள் உயிருடன் மீட்டுள்ளனர். நீரில் மூழ்கிய ஏனைய மாணவர்கள் உடனடியாக வனாத்தவில்லுவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
அவர்களில் மிகவும் ஆபத்தான நிலையில் இருந்த மூன்று மாணவர்கள் மேலதிக சிகிச்சைக்காக புத்தளம் பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்ட போதிலும், சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த மூவரும் அப்பகுதியில் அமைந்துள்ள பாடசாலையொன்றில் 11ஆம் தரத்தில் கல்வி கற்று வந்த மாணவர்கள் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த துயரச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.





