'முரசு' தீவிர சூறாவளி; மறு அறிவித்தல் வரை ஆழ்கடலுக்குச் செல்லத் தடை – மீனவர்களுக்கு எச்சரிக்கை!

வங்காள விரிகுடாவின் மேற்கு மத்திய பகுதியில் நிலைகொண்டுள்ள ‘முரசு’ (Murasu) தீவிர சூறாவளி காரணமாக, பல ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என இலங்கை வளிமண்டலவியல் திணைக்களம் கடற்படையினர் மற்றும் மீனவர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதன்படி, 10° வடக்கு முதல் 17° வடக்கு வரையிலான அட்சரேகைகளுக்கும், 80° கிழக்கு முதல் 85° கிழக்கு வரையிலான தீர்க்கரேகைகளுக்கும் இடைப்பட்ட ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மறு அறிவித்தல் வரை இந்த எச்சரிக்கை அமுலில் இருக்கும் எனவும், ஏற்கனவே குறித்த கடற்பகுதிகளில் மீன்பிடி அல்லது கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் பாதுகாப்பான இடங்களை நோக்கி நகருமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், மன்னாரிலிருந்து காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான ஆழ்கடல் பகுதிகளுக்குச் செல்வதற்கும் மறு அறிவித்தல் வரை தடை விதிக்கும் வகையில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று (03) அதிகாலை 2.30 மணியளவில், முரசு தீவிர சூறாவளியானது 15.3° வடக்கு அட்சரேகை மற்றும் 80.3° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் நிலைகொண்டிருந்ததாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இந்தச் சூறாவளி வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து, இன்று இந்தியாவின் ஆந்திரப் பிரதேசக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதற்கிடையில், இன்று இலங்கையைச் சூழவுள்ள கடற்பகுதிகளில் பல இடங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் எனவும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சிலாபத்திலிருந்து மன்னார் மற்றும் காங்கேசன்துறை ஊடாக திருகோணமலை வரையிலான கடற்பகுதிகளில் தென்மேற்கு அல்லது தெற்குத் திசையிலிருந்து மணித்தியாலத்திற்கு 25 முதல் 35 கிலோமீற்றர் வேகத்தில் காற்று வீசக்கூடும். அவ்வப்போது காற்றின் வேகம் 40 முதல் 45 கிலோமீற்றர் வரை அதிகரிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் குறித்த கடற்பகுதிகள் அவ்வப்போது ஓரளவு கொந்தளிப்பாகக் காணப்படும் எனவும், ஏனைய கடற்பகுதிகள் மிதமான நிலையில் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணித்தியாலத்திற்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் தற்காலிகமாகப் பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகக் காணப்படக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

எனவே, கடற்படையினர் மற்றும் மீனவர்கள் மிகுந்த அவதானத்துடன் செயற்படுவதுடன், வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிடும் எதிர்வரும் வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் எச்சரிக்கைகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.

Leave a Reply