இனி யாரும் தப்ப முடியாது! நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகக் கூச்சலிடுபவர்களுக்கு அநுர விடுத்த அதிரடிச் செய்தி

நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புகளே நாட்டின் சட்டம் தொடர்பான இறுதியான தீர்மானங்கள் எனவும், அந்தத் தீர்ப்புகளுக்கு அரசாங்கம் என்ற ரீதியில் தாம் முழுமையாகக் கட்டுப்படுவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பதுளை மாவட்டத்தில் இன்று (18) நடைபெற்ற தேசிய மக்கள் சக்தியின் மகளிர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

நீதிமன்றத் தீர்ப்புகளுக்கு அப்பால் தம்மிடமிருந்து வேறு தீர்மானங்களை எவரும் எதிர்பார்க்க வேண்டாம் என வலியுறுத்திய ஜனாதிபதி, நாட்டின் சட்டம் தொடர்பான இறுதித் தீர்மானங்களை எடுக்கும் அதிகாரம் நீதிமன்றங்களுக்கே இருப்பதாகச் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, உயர்நீதிமன்றம் தீர்ப்பொன்றை வழங்கிய பின்னர் அதனை மாற்றுமாறு கோரி கூச்சலிடுவதால் எவ்விதப் பயனும் ஏற்படப்போவதில்லை எனவும், இவ்வாறான செயற்பாடுகளால் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாக்க முடியாது எனவும் அவர் தெரிவித்தார்.

சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான முழுமையான அதிகாரம் உரிய நிறுவனங்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட ஜனாதிபதி, சட்டத்தின் முன் அனைவரும் சமமாக நடத்தப்படாத நாட்டில் எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான சூழலை உருவாக்க முடியாது எனத் தெரிவித்தார்.

கடந்த காலங்களில் தங்கள் மீது சட்டம் பாயாது என நினைத்துக்கொண்டிருந்தவர்கள் மீதும் தற்போது சட்டம் சமமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை, நாட்டில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பாதாள உலகக் குற்றச்செயல்கள் அதிகரித்தமைக்குச் சட்டத்தின் ஆட்சி பலவீனமடைந்தமையே பிரதான காரணம் என ஜனாதிபதி குற்றஞ்சாட்டினார்.

கடந்த காலங்களில் அரசியல் பாதுகாப்பின் கீழேயே இவ்வாறான சட்டவிரோதச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.

எனினும், தற்போதைய அரசாங்கத்தின் கீழ் போதைப்பொருள் கடத்தலுக்கும் பாதாள உலகக் குற்றச்செயல்களுக்கும் எவ்வித இடமும் வழங்கப்பட மாட்டாது என ஜனாதிபதி உறுதியளித்தார்.

கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் முதல் தற்போது வரை முன்னெடுக்கப்பட்ட விசேட நடவடிக்கைகளின் மூலம் 2,484 கிலோகிராம் ஹெரோயின், 3,301 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் 297 கிலோகிராம் கொக்கெய்ன் ஆகியவை பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

அத்துடன், 93 ரி-56 ரகத் துப்பாக்கிகள், 141 கைத்துப்பாக்கிகள் மற்றும் 105 ரிவோல்வர்களும் கைப்பற்றப்பட்டுள்ளதாக ஜனாதிபதி குறிப்பிட்டார்.

எதிர்கால சந்ததியினருக்குப் பாதுகாப்பான நாட்டை உருவாக்க வேண்டுமானால் போதைப்பொருள் கடத்தலையும் பாதாள உலகக் குற்றச்செயல்களையும் முழுமையாக ஒழிக்க வேண்டியது அவசியம் எனவும் அவர் வலியுறுத்தினார்.

இதனிடையே, உலகளாவிய தொழிலாளர் சந்தையின் தேவைகளுக்கு ஏற்ப ஆக்கபூர்வமான மற்றும் திறமையான மாணவர்களை உருவாக்குவதற்கு நாட்டின் பாரம்பரியக் கல்வி முறையில் மாற்றங்களை ஏற்படுத்த வேண்டியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

அதன்படி, நாடளாவிய ரீதியில் 6,000க்கும் மேற்பட்ட பாடசாலைகளுக்கு அதிவேக ஃபைபர் இணைய இணைப்புகளை வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் ஜனாதிபதி அறிவித்தார்.

மேலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எந்தவொரு சதித்திட்டத்திற்கும் அடிபணியாது என ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார். 

Leave a Reply