உடலில் பச்சை குத்தியது போன்ற தோற்றம்… சிறைக் கம்பிகளுடன் பாராளுமன்றம் அருகே பதற்றம்

பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA), பயங்கரவாதத்தில் இருந்து அரசைப் பாதுகாக்கும் சட்டமூலம் (PSTA) மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களைத் தடுக்கும் சட்டமூலம் (OCA) ஆகியவற்றை முழுமையாக இரத்துச் செய்யுமாறு வலியுறுத்தி, பாராளுமன்றத்துக்கு அருகில் இன்று (04) நண்பகல் எதிர்ப்பு ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மக்கள் போராட்ட இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், முன்னிலை சோசலிசக் கட்சி, மக்கள் போராட்ட இயக்கம், சுதந்திரத்துக்கான பெண்கள் இயக்கம் உள்ளிட்ட பல்வேறு சிவில் அமைப்புகளின் பிரதிநிதிகளும் ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.

இதன்போது, குறித்த சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில், போராட்டக்காரர்கள் தமது உடல்களில் பச்சை குத்தியிருப்பதைப் போன்ற தோற்றத்தில் சாயம் பூசியும், கேலிச் சித்திரங்கள் மற்றும் எதிர்ப்பு வாசகங்கள் பொறிக்கப்பட்ட பதாகைகளை ஏந்தியும் எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

மேலும், சிறைச்சாலையின் ஜன்னல்களைப் போன்ற உருவ அமைப்புகளைக் கொண்ட மாதிரிகளைத் தயாரித்து அவற்றைச் சுமந்தவாறு போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தை நோக்கி முன்னேறினர்.

இந்தப் போராட்டத்தை முன்னிட்டு பொல்துவ சந்திப்புப் பகுதியில் பொலிஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply