18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் வரி செலுத்துவோர் அடையாள இலக்கமான (TIN) இலக்கத்தைக் கட்டாயமாக்குவது தொடர்பில் பொதுமக்கள் அச்சமடையத் தேவையில்லை என அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
டின் இலக்கம் இல்லாதவர்கள், தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்தி வங்கிக் கணக்குகளைத் திறப்பதற்கும் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கும் தேவையான தற்காலிகத் தளர்வுகள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் உள்ள அரச தகவல் திணைக்களத்தில் நேற்று (03) நடைபெற்ற வாராந்த அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பொருளாதாரச் செயற்பாடுகளை முறைப்படுத்துவதற்கும், முறையான வரி அறவீட்டுக் கட்டமைப்பை உருவாக்குவதற்கும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் டின் இலக்கத்தை வழங்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
எனினும், டின் இலக்கத்தை வைத்திருக்கும் அனைவரும் வருமான வரி செலுத்த வேண்டிய அவசியமில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் 18 வயதுக்கு மேற்பட்ட சுமார் 17 மில்லியன் மக்களில் ஏற்கனவே 13 மில்லியன் பேருக்கு டின் இலக்கம் வழங்கப்பட்டுள்ளதுடன், அவர்களில் 1.2 மில்லியன் பேர் மாத்திரமே வருமான வரி செலுத்துபவர்களாகப் பதிவாகியுள்ளனர்.
மீதமுள்ள 4 மில்லியன் பேருக்கும் டின் இலக்கத்தை வழங்க வேண்டியுள்ள நிலையில், கடந்த நவம்பர் 1ஆம் திகதி முதல் சில குறிப்பிட்ட சேவைகளுக்கு டின் இலக்கம் கட்டாயமாக்கப்பட்டது.
இதனால், வங்கிக் கணக்குகளைத் திறப்பது மற்றும் வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பது உள்ளிட்ட சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் பொதுமக்கள் நடைமுறைச் சிரமங்களையும் நீண்ட வரிசைகளையும் எதிர்கொண்டனர்.
இதனைக் கருத்திற்கொண்டு உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் ஊடாகப் புதிய அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதற்கமைய, டின் இலக்கம் இல்லாதவர்கள் தமது தேசிய அடையாள அட்டை மற்றும் அடிப்படைத் தகவல்களைச் சமர்ப்பித்து வங்கிக் கணக்குகளைத் திறக்க முடியும். அதேபோன்று, வாகன அனுமதிப்பத்திரங்களைப் புதுப்பிப்பதற்கும் தேசிய அடையாள அட்டையைப் பயன்படுத்துவதற்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
டின் இலக்கங்களை வழங்கும் நடவடிக்கை தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படும் என்பதால், பொதுமக்கள் அவசரப்படத் தேவையில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.





