கலகொடஅத்தே ஞானசார தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி கொழும்பு விஹாரமகாதேவி பூங்கா வளாகத்தில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது, உரிய அனுமதியின்றி ஒலிபெருக்கியைப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் சந்தேகநபர்களை உடனடியாகக் கைது செய்யுமாறு கொழும்பு மேலதிக நீதவான் லஹிரு சில்வா குருந்துவத்தை பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார்.
அத்துடன், போராட்டத்தின்போது பூங்காவில் காட்சிப்படுத்தப்பட்டிருந்த பதாகைகள், சுவரொட்டிகள் மற்றும் காட்சி பலகைகளை அகற்றச் சென்ற கொழும்பு மாநகர சபை அதிகாரிகள் மற்றும் பூங்கா பொறுப்பதிகாரி ஆகியோரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களையும் உடனடியாகக் கைது செய்யுமாறு நீதிமன்றம் மற்றுமொரு உத்தரவைப் பிறப்பித்துள்ளது.
குறித்த போராட்டம் தொடர்பில் குருந்துவத்தை பொலிஸார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த இரண்டு முறைப்பாடுகளைப் பரிசீலித்த பின்னரே இந்த உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன.
குருந்துவத்தை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பிரதம பொலிஸ் பரிசோதகர் சாகர தயரத்ன இந்த முறைப்பாடுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்திருந்தார்.
இதற்கமைய, சம்பவம் தொடர்பான சிசிடிவி மற்றும் காணொளிப் பதிவுகளைப் பரிசோதித்து, அரச அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தவர்களையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இதேவேளை, குறித்த போராட்டம் தொடர்பாக பொலிஸார் நீதிமன்றத்தில் பெற்றிருந்த இடைக்கால உத்தரவு தொடர்பான முறைப்பாட்டை முடிவுக்குக் கொண்டுவரவும் நீதிமன்றம் இன்று (04) உத்தரவிட்டுள்ளது.





