தீபாவளியை முன்னிட்டு இந்து ஆலயங்களில் விசேட வழிபாடுகள்!

தீபாவளித் திருநாளை முன்னிட்டு  இந்து ஆலயங்களில் இன்று (08) விசேட பூஜை வழிபாடுகள் பக்திபூர்வமாக நடைபெற்றன.

இதன்படி, மட்டக்களப்பு வரலாற்றுப் புகழ்மிக்க மாமாங்கேஸ்வரர் ஆலயத்தில் தீபாவளித் திருநாளை முன்னிட்டு சிறப்பு யாக பூஜை மற்றும் அபிஷேக பூஜைகள் இடம்பெற்றன.

இதன்போது பெருமளவிலான பக்தர்கள் ஆலயத்துக்கு வருகை தந்து இறைவனை வழிபட்டதுடன், தமது குடும்பங்களின் நலன், ஆரோக்கியம், மகிழ்ச்சி மற்றும் நாட்டின் சுபீட்சம் வேண்டிப் பிரார்த்தனைகளிலும் ஈடுபட்டனர்.

 மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையார் ஆலயத்தில் தீபாவளி சிறப்பு பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதம குரு சிவஸ்ரீ மயூரவதனக் குருக்கள் தலைமையில், மூல மூர்த்தியான ஸ்ரீ மாணிக்கப் பிள்ளையாருக்கும் ஏனைய பரிவாரத் தெய்வங்களுக்கும் விசேட கிரியைகள் முன்னெடுக்கப்பட்டன.

இதன்போது, அப்பகுதியைச் சேர்ந்த பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, வரலாற்றுச் சிறப்புமிக்க புத்தளம், உடப்பு ஸ்ரீ ருக்மணி சத்தியபாமா சமேத ஸ்ரீ பார்த்தசாரதிப் பெருமாள் திரௌபதியம்மன் ஆலயத்திலும் வருடாந்த தீபாவளி விசேட காலை நேரப் பூஜைகள் இன்று நடைபெற்றன.

ஆலயத்தின் பிரதம குருவான சிவஸ்ரீ பஞ்சாட்சரக் குருக்கள் தலைமையில் விசேட பூஜை வழிபாடுகள் இடம்பெற்றதுடன், பக்தர்களால் சிற்றி விளக்குகளும் ஆலயத்தில் ஏற்றப்பட்டன.

இதில் இந்து ஆலய பரிபாலன சபையின் தலைவர் உள்ளிட்ட பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு வழிபாடுகளில் ஈடுபட்டனர்.

இதேவேளை, திருகோணமலை வரலாற்றுப் புகழ்மிக்க திருக்கோணேஸ்வரம் ஆலயத்திலும் தீபாவளித் திருநாளை முன்னிட்டு விசேட பூஜை வழிபாடுகளும் பிரார்த்தனை நிகழ்வுகளும் இடம்பெற்றன.

புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்கவின் வழிகாட்டுதலின் கீழ், இந்து சமய கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ய. அநிருத்தனின் ஏற்பாட்டிலும், திருகோணமலை மாவட்ட செயலக இந்து சமய கலாசார உத்தியோகத்தர் திருமதி இலக்குமிதேவி ஸ்ரீதரனின் ஒருங்கிணைப்பிலும் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இதில் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.எஸ். குகதாசன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

இதன்போது கோணேசப் பெருமானுக்கு விசேட பூஜைகள் இடம்பெற்றதுடன், நாட்டின் அமைதி, சுபீட்சம், மக்களின் நல்வாழ்வு மற்றும் பக்தர்களின் நலன் வேண்டி விசேட பிரார்த்தனைகளும் முன்னெடுக்கப்பட்டன.

பல்வேறு சமூகங்களுக்கிடையிலான சமய நல்லிணக்கம், சமூக ஒற்றுமை மற்றும் தேசிய ஒருமைப்பாட்டை வலுப்படுத்தும் நோக்கிலும் இவ்வழிபாட்டு நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தின் சம்பூர் ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலயத்திலும் இன்று தீபாவளி விசேட பூஜை வழிபாடுகள் நடைபெற்றன.

இதில் அதிகளவான சைவ பக்த அடியார்கள் கலந்துகொண்டு அம்மனை வழிபட்டனர்.

தீபாவளித் திருநாளை முன்னிட்டு ஆலயங்களில் இடம்பெற்ற விசேட வழிபாடுகளில் பக்தர்கள் பெருமளவில் கலந்துகொண்டு இறையருள் வேண்டிப் பிரார்த்தனைகளில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply