சிறைச்சாலைகளில் பரவும் நோய்; நீதிமன்றங்களுக்கு இன்று கைதிகள் வராதது ஏன்?

இலங்கையின் மூன்று சிறைச்சாலைகளில் கைதிகளிடையே தட்டம்மை (Measles) நோய் பரவி வருவதையடுத்து, குறித்த சிறைச்சாலைகளிலிருந்து கைதிகளை நீதிமன்றங்களில் ஆஜர்படுத்தும் நடவடிக்கைகள் இன்று தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

வெலிக்கடை சிறைச்சாலை, மெகசின் சிறைச்சாலை மற்றும் கொழும்பு விளக்கமறியல் சிறைச்சாலை ஆகியவற்றில் தட்டம்மை நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து, 

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் செனக பல்லேதென்ன தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, இன்று கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம், கொழும்பு மேல் நீதிமன்றம் மற்றும் கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உள்ளிட்ட நீதிமன்றங்களில் வழக்கு விசாரணைகளுக்காக முன்னிலைப்படுத்தப்படவிருந்த கைதிகள் அழைத்து வரப்படவில்லை.

இந்த நிலைமை தொடர்பில் சிறைச்சாலை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நீதிமன்றங்களுக்கு எழுத்துமூலமாக அறிவித்துள்ளனர். 

இதனால், இன்று நீதிமன்றங்களுக்கு சிறைச்சாலை அதிகாரிகள் மாத்திரமே வருகை தந்திருந்ததுடன், கைதிகள் இல்லாததால் வழக்கு நடவடிக்கைகளுடன் தொடர்புடைய சிறைக்கூடங்களும் வெறிச்சோடிக் காணப்பட்டன.

அதேவேளை, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் கைதிகளை ஒரு சிறைச்சாலையிலிருந்து மற்றொரு சிறைச்சாலைக்கு மாற்றும் நடவடிக்கைகளும் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளன.

நோய்த்தொற்றைக் கட்டுப்படுத்துவதற்கான தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், கைதிகளை விரைவில் மீண்டும் நீதிமன்றங்களில் ஆஜர்படுத்துவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் தெரிவித்துள்ளார்.

Leave a Reply