தேசிய உற்பத்தித்திறன் விருதில் தேசிய மட்டத்தில் மூன்றாம் இடம் – புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி வரலாற்றுச் சாதனை!

தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில், முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி முதன்முறையாகப் பங்குபற்றி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது.

முல்லைத்தீவு மாவட்டத்தில் இப்போட்டியில் தேசிய மட்டத்தில் விருதினைப் பெற்ற ஒரேயொரு பாடசாலையாகவும் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி திகழ்கின்றது.

தேசிய உற்பத்தித்திறன் செயலகத்தினால், கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சி அபிவிருத்தி அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்பட்ட தேசிய உற்பத்தித்திறன் விருதுகள் 2025/2026 போட்டியில், உயர்தரம் வரையிலான அரசாங்கப் பாடசாலைகள் பிரிவில் இவ்விருது கிடைத்துள்ளது.

இதற்கான விருது வழங்கும் நிகழ்வு இன்றையதினம் (08.11.2026) கொழும்பு பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் (BMICH) நடைபெற்றது.

இதன்போது, அமைச்சர்களான சுனில் ஹந்துன்நெத்தி, சத்துரங்க அமரசிங்க உள்ளிட்ட விருந்தினர்களால் புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரிக்கு மூன்றாம் இடத்திற்கான விருது மற்றும் சான்றிதழ் வழங்கி கௌரவிக்கப்பட்டது.

முதன்முறையாகப் போட்டியில் பங்குபற்றி தேசிய மட்டத்தில் மூன்றாம் இடத்தைப் பெற்றுள்ளதுடன், முல்லைத்தீவு மாவட்டத்தில் ஒரேயொரு பாடசாலையாக இந்த அங்கீகாரத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரியின் இந்தச் சாதனை பாடசாலைச் சமூகத்திற்கும், முல்லைத்தீவு மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளதுடன், பாடசாலையின் அதிபர், ஆசிரியர்கள், மாணவர்கள், கல்விசாரா ஊழியர்கள், பழைய மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கும் பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்துள்ளது.

Leave a Reply