அரசமைப்பின் 13 ஆவது திருத்தம் மூலம் மாகாண சபைகளுக்கு வழங்கப்பட்ட பிரதான அதிகாரங்களில் ஒன்றான சுகாதார – மருத்துவத்துறை தொடர்பான விடயத்தை வடக்கு மாகாண சபையிடமிருந்து மத்திய அரசுக்கு பிடுங்கி எடுக்கும் முக்கிய கொள்கை முடிவு ஒன்று பற்றிய விடயங்களை நிதி அமைச்சரான ஜனாதிபதி அநுரகுமார திஸநாயக்க நேற்று தமது வரவு – செலவுத் திட்ட உரையில் வெளியிட்டிருக்கின்றார்.
வடக்கு மாகாண சபையின் நிர்வாகத்தில் இருக்கும் மன்னார், முல்லைத்தீவு, கிளிநொச்சி, வவுனியா ஆகிய பிரதான மருத்துவமனைகளை – மாவட்டப் பொது வைத்தியசாலைகளை – அபிவிருத்தி என்ற பெயரில் மத்திய அரசுக்கு மாற்றும் திட்டத்தை ஜனாதிபதி நேற்று தமது உரையில் வெளியிட்டிருக்கின்றார். 13ஆவது திருத்தத்தின் கீழ் இந்த விடயம் மாகாண சபைக்கு முழுமையாக ஒப்படைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே யாழ்ப்பாணம் மற்றும் மட்டக்களப்பு மருத்துவமனைகள், போதனா வைத்தியசாலைகள் என்ற பெயரில் மத்திய அரசினால் நிர்வகிக்கப்படுகின்றன.
வடக்கு மாகாண சுகாதார அமைச்சின் கீழ் உள்ள இந்த நான்கு வைத்தியசாலைகளையும் அபிவிருத்தி செய்து மேம்படுத்துவதற்கு மாகாண சபையிடம் போதிய நிதி இல்லை என்ற காரணத்தைக் காட்டி அந்த வைத்தியசாலைகளை மாகாண சபையிடமிருந்து பிடுங்கும் நடவடிக்கையை இப்போது தேசிய மக்கள் சக்தி அரசு முன்னெடுக்கின்றது.
வடக்கில் இந்த நான்கு வைத்தியசாலைகளுடன் கம்பஹா மற்றும் அவிசாவளையில் உள்ள இரண்டு வைத்தியசாலைகளும் மாகாண சபைகளிடமிருந்து மத்திய அரசுக்கு பாரதீனப்படுத்தப்படவிருக்கின்றன என்பது ஜனாதிபதியின் வரவு – செலவுத் திட்ட உரையிலிருந்து வெளிப்பட்டுள்ளது.
ஏற்கனவே மாகாணத்துக்கு ஒதுக்கப்பட்ட கல்வித்துறையின் கீழ் இருக்கும் பாடசாலைகளை ‘தேசிய பாடசாலைகள்’ என்ற பெயரில் மாகாண சபைகளிடமிருந்து பிடுங்கி மத்திய அரசுடன் இணைத்து வரும் கொழும்பு அதிகார பீடம் இப்போது வடக்கு வைத்தியசாலைகள் விடயத்திலும் தீர்க்கமான நகர்வை முன்னெடுக்கத் தொடங்கியுள்ளது.
இந்த வைத்தியசாலைகள் எல்லாம் மத்திய அரசின் கட்டுப்பாட்டில் வருமானால் அதன் பின்னர் மாகாணத்தில் உள்ள சில சிறிய வைத்தியசாலைகளையும் மருந்தகங்களையும்தான் சபை நிர்வகிக்க வேண்டிய நிலை வரும் என்று சுட்டிக்காட்டப்படுகிறது.




