போரினால் பாதிக்கப்பட்டு மிதிவெடி அபாயத்தை எதிர்கொண்ட வடக்குப் பகுதிகளில் மனிதாபிமானப் பணிகளில் ஈடுபட்டுவரும் MAG (Mines Advisory Group) சர்வதேச அமைப்பின் எச்சரிக்கை மற்றும் விழிப்புணர்வுப் பலகை செட்டிகுளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் பிரதேச சபையினரால் அகற்றப்பட்டுள்ளமை பெரும் சர்ச்சையையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது
கடந்த 2002 ஆம் ஆண்டு முதல் இலங்கையில் இயங்கிவரும் இந்நிறுவனம் தமிழர்களின் பகுதிகளில் எங்கும் புதைக்கப்பட்ட இலட்சக்கணக்கான நிலக்கண்ணிவெடிகளை அகற்றி மக்களின் உயிரைக் காப்பதிலும் பாதுகாப்பான நிலங்களை மீள வழங்குவதிலும் வரலாற்றுச் சிறப்புமிக்க சேவையாற்றியுள்ளது
இந்நிலையில் செட்டிகுளம் பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் செட்டிக்குளம் பிரதேச சபையினரால் இப்பலகை அகற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது
தமிழர்களின் இடங்கள் பாதுகாப்பானதாக மாறுவதற்கு உழைத்த ஒரு சர்வதேச மனிதாபிமான அமைப்பின் அடையாளப் பலகையை நீக்கியது அவர்களின் தியாகத்திற்குச் செய்யும் அவமரியாதை எனப் அச் சபையின் உபதவிசாளர் உள்ளிட்ட பொதுமக்கள் பலரும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்
மேலும் சம்பந்தப்பட்ட விளம்பரப் பலகை குறிப்பிட்ட அந்த இடத்தில் மீண்டும் நிறுவப்படாத பட்சத்தில் உப தவிசாளர் தனது பதவியை விலக வேண்டிய நிலை ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது
உள்ளூர் நிர்வாக விதிகளையும் போரினால் சிதைந்த மக்களுக்கு மனிதாபிமான முறையில் உதவிய தொண்டு நிறுவனங்களின் சேவைகளையும் பரஸ்பரம் மதித்து இவ்விடயத்தில் உடனடியாகச் சுமூகமான தீர்வு காணப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாக உள்ளது



