முல்லைத்தீவு கடற்பரப்பில் இந்திய மீனவர்களின் அத்துமீறல்களால் இலங்கை மீனவர்களின் மீன்பிடி வலைகள் மற்றும் படகுகள் சேதப்படுத்தப்படுவதுடன், கடல் வளங்களும் அழிக்கப்படுவதாக கடற்றொழில், கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று (15.11.2026) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இந்திய இழுவைமடிப் படகுகள் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழைந்து, இலங்கை மீனவர்களின் வலைகள், படகுகள் மாத்திரமன்றி கடல் வளங்களையும் அழிக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இவ்விடயம் தொடர்பாக இந்திய அதிகாரிகளிடம் ஏற்கனவே பலமுறை எடுத்துரைத்துள்ளதாகவும், இதற்கான உரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டிய பொறுப்பு தமிழக அரசாங்கத்திற்கே உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில், தமிழக முதலமைச்சர் விஜய்யிடம் விசேட கோரிக்கையொன்றையும் முன்வைத்துள்ளார்.
திரைப்படங்களில் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுத்துப் போராடியுள்ள விஜய், தற்போது தமிழகத்தின் முதலமைச்சராக இருக்கும் நிலையில், இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் இந்தப் பிரச்சினைக்கும் தீர்வுகாண நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.
மேலும், ஒரு சில மீன் வியாபாரிகள் கூலியாட்களைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்புக்குள் சட்டவிரோதமாக நுழைந்து கடல் வளங்களைக் கொள்ளையடிப்பதாகவும், இவ்வாறான நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் தொப்புள்கொடி உறவு என்ற உறவுமுறையைப் பேசுவது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையில், இலங்கை கடற்படையை மேலும் பலப்படுத்துவதுடன், இவ்வாறான அத்துமீறல்களைக் கட்டுப்படுத்துவதற்காகத் தனியான பிரிவொன்றை உருவாக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
எனவே, எதிர்காலத்தில் இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி நுழையும் இந்திய மீன்பிடிப் படகுகள் கைது செய்யப்படுவது தவிர்க்க முடியாததாக இருக்கும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இந்திய இழுவைமடிப் படகுகளின் உரிமையாளர்கள் இத்தகைய நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்ட அமைச்சர், வடபகுதி மீனவர்களின் வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் பாதிக்கும் இச்செயற்பாடுகளை இனியும் அனுமதிக்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.
இப்பிரச்சினைக்குத் தீர்வுகாண இலங்கை அரசாங்கத்தால் முன்னெடுக்கக்கூடிய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.



