வவுனியா, தாண்டிக்குளத்தின் வான் பாய்ந்து வரும் நிலையில், குறித்த நீரானது கறுப்பு நிறமாக மாறி, நுரைத்த நிலையிலும் கடும் துர்நாற்றத்துடனும் காணப்படுவதாகத் தாண்டிக்குளம் கமக்கார அமைப்பினர் கவலை தெரிவித்துள்ளனர்.
குறித்த குளத்தின் நீரானது பேராராறு நீர்த்தேக்கத்தைச் சென்றடைவதுடன், அந்த நீர்த்தேக்கத்தின் ஊடாகவே வவுனியா மாவட்ட மக்களுக்கான குடிநீர் விநியோகம் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் நீரின் தரம் குறித்து எழுந்துள்ள அச்சத்தைத் தொடர்ந்து, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் வேண்டுகோளுக்கமைய, கமநல அபிவிருத்தித் திணைக்களம் மற்றும் ஏனைய சம்பந்தப்பட்ட திணைக்களங்களின் அதிகாரிகள் இணைந்து இன்று விசேட கள ஆய்வினை மேற்கொண்டனர்.
குறித்த கள ஆய்வில் கமநல அபிவிருத்தித் திணைக்கள உதவி ஆணையாளர், பிராந்தியப் பொறியியலாளர், மற்றும் சுற்றாடல் மற்றும் தொழில்சார் சுகாதார வைத்திய அதிகாரி, மத்திய சுற்றாடல் அதிகார சபையின் உதவிப் பணிப்பாளர், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் மாவட்ட முகாமையாளர், பொறியியலாளர், சுகாதாரப் பரிசோதகர்கள், மற்றும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினர் ஆகியோர் இணைந்து தாண்டிக்குளம், குளம் மற்றும் அதன் வான் பகுதிகளை நேரில் ஆராய்ந்திருந்தனர்.
இதன் அடிப்படையில் குறித்த குளத்தின் உட்பகுதி, வான் பகுதி மற்றும் வீதிப் பகுதி வடிகால்களிலிருந்து நீர் மாதிரிகளை பெற்று தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையினால் ஆய்வுகூடப் பரிசோதனைக்கு அனுப்புவதற்குரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளது.
குறித்த ஆய்விற்கு முன்னதாக, வவுனியா வைத்தியசாலையின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களையும் அனர்த்த முகாமைத்துவப் பிரிவினரும் மாநகர சபை சுகாதாரப் பரிசோதகர்களும் இணைந்து ஆராய்ந்திருந்தனர்.
இவ் ஆய்வின் அடிப்படையில் எதிர்காலத்தில் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் ஒழுங்கமைப்பில், கண்காணிப்பு நடவடிக்கைகளை முன்னெடுக்கவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை தாண்டிக்குளத்தினைத் தூர்வாருவதற்கான ஆரம்பகட்ட முன்னெடுப்புக்களை மேற்கொள்ளுமாறு தாண்டிக்குளம் கமக்கார அமைப்பினருக்குக் கமநல அபிவிருத்தி உதவி ஆணையாளர் க. விமலரூபன் இதன்போது அறிவுறுத்தல் வழங்கியிருந்தார்.



