இந்தியா – இலங்கை புத்தாக்க மன்றம் (India-Sri Lanka Innovation Forum) ஆரம்பிப்பு!

இந்தியாவும் இலங்கையும் இருதரப்பு உறவுகளின் பல்வேறு துறைகளிலும் வலுவான கூட்டாண்மையையும் நல்லுறவையும் பேணி வருகின்றன. இதன் தொடர்ச்சியாக, தொழில்நுட்பம், புத்தாக்கம் மற்றும் ஆரம்பநிலை தொழில்முனைவோர் (Startups) தொடர்பான ஒத்துழைப்பை மையமாகக் கொண்ட புதியதொரு கூட்டுறவுத் துறை உருவாகியுள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இந்தத் துறையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் எட்டப்பட்டுள்ளன. குறிப்பாக, இரு நாடுகளினதும் தனியார் துறைகள் மற்றும் தொழில்துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பின் ஊடாகப் பல்வேறு செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் ஒரு பகுதியாக, StartUp India மற்றும் இலங்கையின் தகவல் மற்றும் தொடர்பாடல் தொழில்நுட்ப முகவர் நிலையமான ICTA (GovTech) ஆகியவற்றுக்கு இடையிலான ஒத்துழைப்பும், இரு நாடுகளினதும் ஆரம்பநிலை தொழில்முனைவோர் கட்டமைப்புகளைப் பரஸ்பரம் ஆராயும் நடவடிக்கைகளும் இடம்பெற்றுள்ளன.
தொழில்நுட்பச் சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்களுக்காக (Tech SMEs) இந்தியாவின் Nasscom முன்னெடுக்கும் ‘Disha’ திட்டம், இந்தியாவுக்கு வெளியே முதன்முறையாக இலங்கைக்கும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது.
அத்துடன், IIT Madras Pravartak நிறுவனம் இலங்கையின் ஆரம்பநிலை தொழில்முனைவோருக்காக ஆறு வாரகால திறன் மேம்பாட்டு மற்றும் முழுமையான பயிற்சித் திட்டமொன்றை முன்னெடுத்துள்ளது. மேலும், SLASSCOM மற்றும் Dialog PLC ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கைச்சாத்திட்டுள்ளது.
இந்தியாவின் Atal Innovation Mission முன்னெடுக்கும் ‘Tinkering Labs’ திட்டம், Hemas Holdings மற்றும் கொழும்பு ஆனந்தா கல்லூரி (Nalanda College) ஆகியவற்றின் கூட்டாண்மையுடன் 2026 நவம்பர் 4ஆம் திகதி இலங்கையில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
மேலும், IIT Madras Pravartak, IIT Madras Global, பின்லாந்தின் University of Oulu மற்றும் இலங்கையின் பல்கலைக்கழகங்களை ஒன்றிணைத்து, சுத்தமான வலையமைப்புத் தொழில்நுட்பம் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மையமாகச் செயற்படும் Wireless Intelligence and Innovation Institute of Technology, 2026 ஜூன் மாதம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந்தியாவின் முன்னணி உயிரித் தொழில்நுட்பக் காப்பக நிறுவனமான C-CAMP, 2026 செப்டம்பர் மாதம் இலங்கைக்கு விஜயம் செய்து, இலங்கையுடன் புத்தாக்கம் சார்ந்த கூட்டாண்மைகளை ஏற்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய்ந்தது.
இவ்வாறான ஒத்துழைப்புகளைத் தொடர்ந்து முன்னெடுத்துச் செல்வதுடன், தனியார் துறையின் தலைமையிலான முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், இந்தியா – இலங்கை புத்தாக்க மன்றம் (India-Sri Lanka Innovation Forum) 2026 நவம்பர் 12ஆம் திகதி கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் மாண்புமிகு சந்தோஷ் ஜா அவர்களின் பிரசன்னத்தில் இந்நிகழ்வு நடைபெற்றது.
Dialog Axiata PLC, John Keells Holdings PLC, Hayleys PLC, Hemas Holdings PLC மற்றும் Sunshine Holdings PLC உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களின் தலைவர்கள் இதில் கலந்துகொண்டனர்.
அத்துடன், Trace Expert City, nVentures, Hatch, SLASSCOM, Lanka Angel Network மற்றும் Yarl IT உள்ளிட்ட புத்தாக்கம் தொடர்பான வலையமைப்புகள் மற்றும் சிறப்பு மையங்களின் பிரதிநிதிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
 IIT Madras Pravartak நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி டாக்டர் ஷங்கர் ராமன், Centre for Cellular and Molecular Platforms (C-CAMP) நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் பணிப்பாளருமான டாக்டர் தஸ்லிமரிஃப் சயீத், Atal Innovation Mission திட்டத்தின் பணிப்புப் பணிப்பாளர் டாக்டர் தீபக் பக்லா மற்றும் Nasscom SME Council அமைப்பின் தலைவர் மௌலிக் பன்சாலி ஆகியோரும் இணையவழியாக இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
வர்த்தகத் துறையின் தலைமையில் இயங்கும் இந்தப் புத்தாக்க மன்றம், இரு நாடுகளினதும் வர்த்தகத் தலைவர்கள், தொழில்முனைவோர் காப்பகங்கள் (Incubators) மற்றும் முதலீட்டு நிதியங்களை ஒன்றிணைத்து, ஆரம்பநிலை தொழில்முனைவோர் நிறுவனங்களின் புத்தாக்க முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

அத்துடன், இரு நாடுகளுக்கும் இடையில் கூட்டுத் திட்டங்களைத் தீர்மானித்தல், புத்தாக்கச் சூழல் கட்டமைப்புகளுக்கு இடையிலான தொடர்புகளை வலுப்படுத்துதல் மற்றும் தொழில்நுட்பம், தொழில்முனைவு ஆகிய துறைகளில் புதிய வாய்ப்புகளை உருவாக்குதல் என்பனவும் இந்த மன்றத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

Leave a Reply