கிண்ணியா தள வைத்தியசாலையை மத்திய அரசின் (சுகாதார அமைச்சின்) நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவர வலியுறுத்தி, மாபெரும் கையெழுத்து வேட்டை இன்று (15) கொட்டும் கனமழைக்கு மத்தியிலும் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
கிண்ணியா பிரதேச மக்களின் நீண்டகால சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நோக்கில், சிவில் சமூக அமைப்புகளின் ஏற்பாட்டில் இந்தக் கையெழுத்து வேட்டை முன்னெடுக்கப்படுகிறது.
இம்முறை வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகவும் கிண்ணியா தள வைத்தியசாலை மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்படாத நிலையில், கடந்தகால அரசாங்கங்கள் தொடக்கம் மக்களுக்கு வழங்கப்பட்டு வந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என ஏற்பாட்டாளர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
வைத்தியசாலையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறை, வைத்திய உபகரணங்களின் தேவை மற்றும் அவசர சிகிச்சை வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்ட பிரச்சினைகளுக்குத் தீர்வு காண, வைத்தியசாலையை மத்திய அரசின் கீழ் கொண்டுவருவதே சிறந்த வழி எனவும் அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இந்தக் கையெழுத்து வேட்டையில் சுமார் ஒரு இலட்சம் கையொப்பங்களைத் திரட்ட எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆரம்ப நிகழ்வில் சிவில் சமூகப் பிரதிநிதிகள், வர்த்தகர்கள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டு தமது கையொப்பங்களைப் பதிவு செய்தனர்.
எதிர்வரும் நாட்களில் கிண்ணியாவின் அனைத்துப் பகுதிகளிலும் இந்தக் கையெழுத்து வேட்டை விரிவுபடுத்தப்படவுள்ளதுடன், திரட்டப்படும் கையொப்பங்கள் அடங்கிய மகஜர் ஜனாதிபதி மற்றும் சுகாதார அமைச்சரிடம் கையளிக்கப்படவுள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.




