மாணவர்களுக்கு மதிப்பெண்கள் மட்டுமல்ல, நற்பண்புகளும் அவசியம்! – வடக்கு ஆளுநர் வலியுறுத்தல்

மாணவர்கள் வெறுமனே பாடப்புத்தகங்களை மனப்பாடம் செய்து மதிப்பெண்களைப் பெறுவதுடன் மாத்திரம் நின்றுவிடாமல், நற்பண்புகளையும் சக மனிதர்களுக்கு உதவும் மனப்பான்மையையும் வளர்த்துக்கொண்டு சமூகப் பொறுப்புள்ளவர்களாகத் திகழ வேண்டும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் சென்.ஜோன் பொஸ்க்கோ வித்தியாலயத்தின் 2026ஆம் ஆண்டுக்கான பரிசில்நாள் நிகழ்வு நேற்று (13.11.2026) வெள்ளிக்கிழமை பிற்பகல் பாடசாலையின் அன்ரனிடா மண்டபத்தில் பாடசாலை அதிபர் அருட்சகோதரி மேரி அஞ்சலிக்கா தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு மாணவர்களுக்குப் பரிசில்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

நிகழ்வில் ஆளுநர் மேலும் உரையாற்றுகையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் இப்பாடசாலை தொடர்ச்சியாகச் சிறந்த பெறுபேறுகளை வெளிப்படுத்தி வருவதையிட்டு மகிழ்ச்சி தெரிவித்தார். இதற்கு அருட்சகோதரிகளின் வழிகாட்டல், ஆசிரியர்களின் அர்ப்பணிப்பு மற்றும் மாணவர்களின் கல்வியுடன் ஒழுக்கத்துக்கும் வழங்கப்படும் முக்கியத்துவம் என்பனவே பிரதான காரணங்களாகும் எனச் சுட்டிக்காட்டினார். அத்துடன், மாணவர்கள் தமக்கிடையே அன்பையும் பகிர்வையும் வளர்த்துக்கொள்ள வேண்டும் எனவும், இதுவே சிறந்த தலைமைத்துவத்தின் ஆரம்பம் எனவும் அறிவுறுத்தினார். பெற்றோர்கள் தமது பிள்ளைகளை ஏனையவர்களுடன் ஒப்பிடுவதைத் தவிர்த்து, அவர்களுக்காகப் போதிய நேரத்தை ஒதுக்கி நல்ல மனிதர்களாக வளர்த்தெடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

மேலும், மாண்புமிகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க அவர்களால் 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில், எதிர்காலத்தில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன என ஆளுநர் குறிப்பிட்டார். இதற்கமைவாகத் தற்போதைய மாணவர்கள் சிந்தனைத் திறன், தொழில்நுட்ப அறிவு மற்றும் குழுவாகச் செயற்படும் ஆற்றல் ஆகியவற்றை வளர்த்து நவீன உலகத்துடன் போட்டியிடக்கூடிய வகையில் தங்களைத் தயார்படுத்திக்கொள்ள வேண்டும் என ஆளுநர் வலியுறுத்தினார்.

இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட யாழ் போதனா மருத்துவமனையின் மகப்பேற்று மற்றும் பெண்நோயியல் நிபுணர் பேராசிரியர் சிவலிங்கராஜா ரகுராமன் தொடர்பில் ஆளுநர் தனது உரையில் சிலாகித்துப் பேசினார். கிளிநொச்சி மருத்துவமனையில் முடங்கிக் கிடந்த பல மில்லியன் ரூபாய் பெறுமதியான செயற்கைக் கருத்தரிப்பு உபகரணங்களை மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவந்து, குழந்தைச் செல்வம் அற்ற பலருக்கு இலவசமாகச் சேவையாற்றி வரும் அவரின் சமூகப் பொறுப்புணர்வு மாணவர்களுக்குச் சிறந்த முன்னுதாரணம் என ஆளுநர் பாராட்டினார்.

இங்கு உரையாற்றிய சிறப்பு விருந்தினர் பேராசிரியர் ரகுராமன், அண்மையில் மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் விபத்தில் மூளைச்சாவு அடைந்தவர்களின் சிறுநீரகங்களைத் தனது சொந்த வாகனத்தில் எடுத்துவந்து யாழ்ப்பாணத்தில் வெற்றிகரமாகச் சிறுநீரக மாற்றுச் சிகிச்சையை மேற்கொண்ட மருத்துவ நிபுணர் அன்ரன் அன்ரனிசான் இப்பாடசாலையின் பழைய மாணவர் என்பதைக் குறிப்பிட்டார். அவர் 1994ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் முதலிடம் பெற்றவர் என்பதையும் நினைவுகூர்ந்து, மாணவர்களுக்குரிய சிறந்த ஆளுமைகளாக இவர்களைச் சுட்டிக்காட்டினார்.

இப் பரிசில்நாள் நிகழ்வில் கார்மேல் கன்னியர் மடத்தின் தலைவி அருட்சகோதரி வசந்தமலர், லூர்து கன்னியர் மடத்தின் தலைவி அருட்சகோதரி புஷ;பகலா மற்றும் அருட்சகோதரிகள், கல்வித் திணைக்கள உத்தியோகத்தர்கள், அயற்பாடசாலை அதிபர்கள், ஆசிரியர்கள், பழைய மாணவர்கள், பெற்றோர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

Leave a Reply