இலங்கையில் சுமார் 40,000 மருத்துவத் தகுதியற்ற நபர்கள் மருந்து விநியோக நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாக சமூக வைத்திய நிபுணர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இவ்வாறானவர்களால் நுண்ணுயிர் கொல்லிகள் (Antibiotics) தவறான முறையில் விநியோகிக்கப்படுவதால், மருந்துகளுக்கு எதிரான கிருமிகளின் எதிர்ப்புத் தன்மை அதிகரித்து, எதிர்காலத்தில் நோய்களைக் குணப்படுத்துவது கடினமாகலாம் என அச்சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த சமூக வைத்திய நிபுணர்கள் சங்கத்தின் தலைவர் விசேட வைத்திய நிபுணர் ருவன் ஃபெர்டினாண்டு, நாட்டில் நுண்ணுயிர் கொல்லிகளின் தவறான பயன்பாடு அதிகரித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
நோயாளிகள் வீடுகளிலேயே நுண்ணுயிர் கொல்லிகளைப் பெற்றுக்கொள்வது, வைத்தியர்களிடம் இவ்வகை மருந்துகளை வழங்குமாறு கோருவது மற்றும் நோயாளிகளின் எதிர்பார்ப்புக்கு அமைய வைத்தியர்களும் அடிக்கடி இம்மருந்துகளைப் பயன்படுத்துவது ஆகியவை மருந்துகளுக்கு எதிரான கிருமிகளின் எதிர்ப்புத் தன்மை அதிகரிப்பதற்கான முக்கிய காரணங்களாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், வைத்தியர்களின் பரிந்துரையின்றி மருந்துகளை வழங்கும் சுமார் 40,000 பேர் நாட்டில் இருப்பதாகவும், இவர்களில் சிலர் எந்தவிதமான மருத்துவத் தகுதியும் இன்றி மருந்தகங்களில் பணியாற்றி, மருந்துகளை அடையாளம் கண்டு நோயாளிகளுக்கு வழங்கி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
00000000
இலங்கையில் மீண்டும் தலைதூக்கும் ஆபத்து! 82 உயிர்களைப் பறித்த நோய்!
இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் 110,431 பேர் டெங்கு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதுடன், 82 பேர் உயிரிழந்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது.
மேலும், நாட்டின் 161 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் நுளம்புக் குடம்பிகளின் அடர்த்தி அதிகரித்துள்ளதுடன்,
59 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளில் டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார மேம்பாட்டுப் பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவின் சமூக மருத்துவ நிபுணர் மருத்துவர் பிரஷிலா சமரவீர இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், கடந்த நவம்பர் 9ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை 74 சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவுகளை உள்ளடக்கி விசேட டெங்கு ஒழிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதன்போது, 177,017 இடங்கள் பரிசோதிக்கப்பட்டுள்ளதுடன், நுளம்புகள் பெருகக்கூடிய 51,088 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளன. அவற்றில் 9,947 இடங்களில் நுளம்புக் குடம்பிகள் கண்டறியப்பட்டுள்ளன.
இது பரிசோதிக்கப்பட்ட மொத்த இடங்களில் சுமார் 6 சதவீதமாகும்.
டெங்கு நோய் இன்னும் முற்றாக ஒழிக்கப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய மருத்துவர் பிரஷிலா சமரவீர, வீடுகள் மற்றும் சுற்றுப்புறங்களில் நுளம்புகள் பெருகக்கூடிய இடங்களை அகற்றி, பொதுமக்கள் தொடர்ச்சியாக விழிப்புடன் செயற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.



