2027 வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடுகள் அதிகரிப்பு; ஆனால் செலவிடும் திறன் எங்கே? – நாடாளுமன்றத்தில் குகதாசன் கேள்வி

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் அரச வருமானம் அதிகரிப்பதுடன், வரவு செலவுப் பற்றாக்குறையும் குறைக்கப்படுவதாகக் குறிப்பிட்ட திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கதிரவேலு சண்முகம் குகதாசன், ஒதுக்கப்படும் நிதியை உரிய காலத்தில் முழுமையாகச் செலவிடுவதற்கான பொறுப்புக்கூறல் அவசியம் என வலியுறுத்தியுள்ளார்.

இன்று (18) நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்கள் மற்றும் பொருளியல் மதிப்பீடுகளை அடிப்படையாகக் கொண்டு தனது கருத்துகளை முன்வைத்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்

2026ஆம் ஆண்டில் 5,300 பில்லியன் ரூபாவாக மதிப்பிடப்பட்ட அரச வருமானம், 2027ஆம் ஆண்டில் 6,180 பில்லியன் ரூபாவாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாகவும், மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 5.1 சதவீதமாக இருந்த வரவு செலவுப் பற்றாக்குறை 4.5 சதவீதமாகக் குறையும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அதேவேளை, 2027ஆம் ஆண்டில் அரசாங்கம் செலுத்த வேண்டிய கடன் வட்டி மட்டும் சுமார் 2,643 பில்லியன் ரூபாவாக உள்ளதாகவும், இது அரச வருமானத்தில் சுமார் 43 சதவீதம் எனவும் குறிப்பிட்டார்.

மூலதன ஒதுக்கீடுகள் முழுமையாகப் பயன்படுத்தப்படவில்லை

பாதீட்டின் முக்கிய சவால் நிதி ஒதுக்கீடு செய்வது மட்டுமல்ல, ஒதுக்கப்பட்ட நிதியைத் திட்டமிட்ட நோக்கங்களுக்காகச் செலவிடுவதே எனக் குகதாசன் தெரிவித்தார்.

2025ஆம் ஆண்டில் நாட்டின் மொத்த மூலதன ஒதுக்கீட்டில் சுமார் 54 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும், 2026ஆம் ஆண்டிலும் பல அமைச்சுகளின் மூலதனச் செலவினங்கள் குறைந்த மட்டத்திலேயே காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக, 2026ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரையான காலப்பகுதியில் சுகாதார அமைச்சின் மூலதன ஒதுக்கீட்டில் 22.8 சதவீதம் மட்டுமே செலவிடப்பட்டுள்ளதாகவும், வலுசக்தி அமைச்சின் மின்சார உட்கட்டமைப்பு ஒதுக்கீட்டில் சுமார் 10.9 சதவீதம் மட்டுமே பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

கல்வி, விவசாயம், போக்குவரத்து, கைத்தொழில் மற்றும் எண்மியப் பொருளாதாரம் உள்ளிட்ட துறைகளிலும் ஒதுக்கப்பட்ட நிதியைப் பயன்படுத்துவதில் நிலவும் குறைபாடுகளை அவர் தனது உரையில் எடுத்துரைத்தார்.

மகளிர் மற்றும் சிறுவர் அமைச்சுக்கு நிதி அதிகரிக்கப்பட வேண்டும்

2027ஆம் ஆண்டில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கு 20 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், இது மொத்த வரவு செலவுத் திட்டத்தில் சுமார் 0.5 சதவீதம் மட்டுமே எனத் தெரிவித்தார்.

எனவே, பெண்கள் மற்றும் சிறுவர்களின் நலனுக்குப் பொறுப்பான இந்த அமைச்சுக்கான ஒதுக்கீட்டை இரட்டிப்பாக்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்தார்.

அத்துடன், பாடசாலைகளின் எண்மியமயமாக்கல், அரச துறைகளின் தொழில்நுட்பக் கட்டமைப்பு, இணையப் பாதுகாப்பு மற்றும் அரச ஊழியர்களுக்கான பயிற்சி ஆகியவற்றுக்குத் தொடர்ச்சியான நிதி ஒதுக்கீடு அவசியம் என்றும் வலியுறுத்தினார்.

விவசாயத்துக்கான மூலதன ஒதுக்கீடு 2027ஆம் ஆண்டில் குறைக்கப்பட்டுள்ளமை குறித்தும் கவலை வெளியிட்ட அவர், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் மீண்டெழுவதற்கு நீர்ப்பாசனம், களஞ்சிய வசதிகள் மற்றும் பெறுமதி சேர் உற்பத்தி ஆகியவற்றுக்கு மேலதிக நிதி வழங்கப்பட வேண்டும் என்றார்.

வடக்கு, கிழக்கில் இடம்பெயர்ந்த குடும்பங்களை மீள்குடியேற்றக் கோரிக்கை

வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போரினால் இடம்பெயர்ந்துள்ள 13,000 குடும்பங்களை மீள்குடியேற்றுவதற்காக 2026ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் 6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததாகவும், அந்த நிதி முழுமையாகச் செலவிடப்படாத நிலையில் 2027ஆம் ஆண்டில் மேலும் 4 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

போர் முடிவடைந்து 17 ஆண்டுகள் கடந்தும் இந்தக் குடும்பங்கள் மீள்குடியேற்றப்படாமல் உள்ளமை தொடர்பில் விரைவான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனவும் வலியுறுத்தினார்.

அரசாங்கத்துக்கு முன்வைத்த ஏழு பரிந்துரைகள்

ஒதுக்கப்பட்ட நிதி உரிய முறையில் பயன்படுத்தப்படுவதை உறுதிப்படுத்தும் வகையில், அனைத்து அமைச்சுகளும் தமது மூலதனச் செலவினங்களை மாதாந்தம் வெளியிட வேண்டும் என்றும், காலாண்டுதோறும் அரசாங்க நிதி தொடர்பான குழுவுக்கு அறிக்கையிட வேண்டும் என்றும் அவர் பரிந்துரைத்தார்.

மேலும், தொடர்ந்து இரண்டு ஆண்டுகள் 60 சதவீதத்துக்கும் குறைவாக நிதியைப் பயன்படுத்தும் அமைச்சுகளின் செயற்பாடுகள் மீளாய்வு செய்யப்பட வேண்டும், அரச கொள்வனவு நடைமுறைகள் சீரமைக்கப்பட வேண்டும், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுக்கான நிதி அதிகரிக்கப்பட வேண்டும், எண்மியமயமாக்கலுக்கு ஐந்தாண்டு நிதியம் உருவாக்கப்பட வேண்டும், விவசாயம் மற்றும் சுகாதாரத் துறைகளுக்கான நிதிப் பயன்பாடு மேம்படுத்தப்பட வேண்டும் என்றும் கோரினார்.

2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் வருமான அதிகரிப்பு மற்றும் பற்றாக்குறை குறைப்பு உள்ளிட்ட முன்னேற்றங்கள் காணப்படுவதாகக் குறிப்பிட்ட குகதாசன், ஒதுக்கீடுகளை அதிகரிப்பது மட்டும் போதாது; அவை மக்களின் அன்றாட வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும் வகையில் பயன்படுத்தப்பட வேண்டும் என வலியுறுத்தினார்.

“ஒதுக்கிய ஒவ்வொரு ரூபாவும் பாடசாலையிலும், மருத்துவமனையிலும், வயலிலும், தொழிற்சாலையிலும், ஒவ்வொரு பெண்ணின் வாழ்விலும், ஒவ்வொரு குழந்தையின் எதிர்காலத்திலும் தெரிய வேண்டும்” எனக் குறிப்பிட்டு தனது உரையை நிறைவு செய்தார்.

Leave a Reply