யாழ்ப்பாணம், நாவலர் வீதி ரயில்வே கடவைக்கு அருகாமையில் யாழ். மாநகர சபையின் குப்பைகளை ஏற்றிச் செல்லும் லொறியிலிருந்து பெருமளவிலான பழைய பொருட்களும் குப்பைகளும் வீதியில் சிதறி விழுந்ததால், அப்பகுதியில் சுமார் ஒரு மணித்தியாலத்திற்கும் மேலாகப் போக்குவரத்துப் பாதிக்கப்பட்ட சம்பவம் இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
இன்று பிற்பகல் சுமார் 1.30 மணியளவில் இடம்பெற்ற இச்சம்பவம், பாடசாலை மாணவர்கள் வீடு திரும்பும் நேரத்தில் நிகழ்ந்ததால், அவ்வழியாகப் பயணித்த பொதுமக்களும் மாணவர்களும் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டனர்.
இதன்போது அவ்வழியாகப் பயணித்த யாழ்ப்பாணம் மாநகர சபையின் 24ஆம் வட்டார உறுப்பினர் ரத்னம் சதீஸ், வீதியில் சிதறிக் கிடந்த குப்பைகளை உடனடியாக அகற்றி ஒருபுறமாக ஒதுக்கி, போக்குவரத்துக்கு ஏற்பட்ட இடையூறைக் குறைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டார்.
தொடர்ந்து அவ்வழியாக வந்த மாநகர சபையின் மற்றுமொரு வாகனத்தை நிறுத்தி, வீதியில் சிதறிக் கிடந்த குப்பைகள் மற்றும் பழைய பொருட்கள் அனைத்தையும் அதில் ஏற்றி அகற்றுவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொண்டார்.
மாநகர சபையின் குப்பை சேகரிப்பு வாகனங்களில் குப்பைகள் மற்றும் பழைய பொருட்களைக் கொண்டு செல்லும்போது, அவை வீதிகளில் சிதறி விழாத வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் எனப் பல தடவைகள் சபைக் கூட்டங்களில் சுட்டிக்காட்டியுள்ளதாக உறுப்பினர் ரத்னம் சதீஸ் தெரிவித்துள்ளார்.
இருப்பினும், இவ்வாறான சம்பவங்கள் தொடர்ச்சியாக இடம்பெறுவது கவலைக்குரிய விடயமாக உள்ளதாகத் தெரிவித்த அவர், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொறுப்பான ஊழியர்களுடன் கலந்துரையாடி, எதிர்காலத்தில் இவ்வாறான சம்பவங்கள் மீண்டும் இடம்பெறாத வகையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொண்டுள்ளார்.
பொதுமக்களின் பாதுகாப்பையும், வீதிப் போக்குவரத்தின் சீரான இயக்கத்தையும் உறுதிப்படுத்துவது மாநகர சபை உள்ளிட்ட சம்பந்தப்பட்ட தரப்பினரின் பொறுப்பாகும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



