திருகோணமலை மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம்

திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ரொஷான் அக்மீமன தலைமையில் மாவட்ட விவசாய அபிவிருத்திக் குழுக் கூட்டம் நேற்று (17) திருகோணமலை மாவட்ட செயலக பிரதான மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

இதன்போது, கிழக்கு மாகாண விவசாயத் திணைக்களத்தினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு விவசாய அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பில் விரிவாக ஆராயப்பட்டன.

குறிப்பாக, உலர் மிளகாய் உற்பத்தித் திட்டம், சின்ன வெங்காயம் மற்றும் பெரிய வெங்காயம் உற்பத்தித் திட்டங்கள் உள்ளிட்ட விவசாய உற்பத்தியை மேம்படுத்தும் செயற்றிட்டங்களின் தற்போதைய முன்னேற்ற நிலைமைகள் குறித்து கலந்துரையாடப்பட்டன.

அத்துடன், திருகோணமலை மாவட்டத்தில் தென்னைப் பயிர்ச்செய்கைச் சபையினால் முன்னெடுக்கப்பட்டு வரும் இளநீர் கிராமங்கள் திட்டம் தொடர்பிலும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.

மேலும், விவசாயிகள் அபிவிருத்தித் திணைக்களம், விவசாயத் திணைக்களத்தின் விதைகள் மற்றும் நடுகைப் பொருட்கள் பிரிவு, தேசிய உரச் செயலகம், முந்திரிகைக் கூட்டுத்தாபனம் ஆகிய நிறுவனங்களினால் முன்னெடுக்கப்பட்டு வரும் பல்வேறு விவசாய அபிவிருத்தித் திட்டங்கள் மற்றும் அவற்றின் முன்னேற்றங்கள் தொடர்பிலும் இக்கூட்டத்தில் ஆராயப்பட்டன.

இக்கூட்டத்தில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்டச் செயலாளருமான டபிள்யூ.ஜி.எம். ஹேமந்த குமார, மேலதிக அரசாங்க அதிபர் (காணி) திருமதி ஜெ. ஸ்ரீபதி, விவசாய அமைச்சின் இணைப்பாளர் நிரோஷன் உள்ளிட்ட விவசாயத்துடன் தொடர்புடைய அரச நிறுவனங்கள் மற்றும் அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலரும் கலந்து கொண்டனர்

Leave a Reply