இன்று நள்ளிரவு முதல் இடைநிறுத்தப்படும் முக்கிய சேவை! வாகன உரிமையாளர்களுக்கு அவசர அறிவிப்பு!

மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரம் வழங்கும் சேவை இன்று (18) நள்ளிரவு முதல் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு வரை தற்காலிகமாக இடைநிறுத்தப்படவுள்ளதாக மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களம் அறிவித்துள்ளது.

திணைக்களத்தின் இலத்திரனியல் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள தொழில்நுட்பப் புதுப்பித்தல் நடவடிக்கைகள் காரணமாகவே இந்தச் சேவை இடைநிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, குறித்த காலப்பகுதியில் வருமான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டிய வாகன உரிமையாளர்கள், எவ்வித தண்டப்பணமும் இன்றி எதிர்வரும் 25ஆம் திகதி முதல் 27ஆம் திகதி வரை அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, மேல் மாகாண மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.motortraffic.wp.gov.lk ஊடாக ஒன்லைனில் வருமான அனுமதிப்பத்திரம் பெற்றுக்கொள்ளும் சேவையும் இன்று முதல் எதிர்வரும் 23ஆம் திகதி நள்ளிரவு வரை இடைநிறுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, மேல் மாகாணத்தில் வாகன வருமான அனுமதிப்பத்திரத்தைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பவர்கள் இந்தத் தற்காலிக மாற்றத்தைக் கவனத்தில் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

Leave a Reply