இலங்கை மத்திய வங்கி, ஒரிரவு கொள்கை வட்டி வீதத்தை (OPR) 25 அடிப்படை புள்ளிகளால் அதிகரித்து 9 சதவீதமாக உயர்த்த தீர்மானித்துள்ளது.
நேற்று (24) நடைபெற்ற நாணயக் கொள்கைச் சபைக் கூட்டத்தில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உள்நாட்டு மற்றும் உலகளாவிய பொருளாதார நிலைமைகள், எதிர்காலப் போக்குகள் ஆகியவற்றை கவனமாகப் பரிசீலித்த பின்னரே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய வங்கி குறிப்பிட்டுள்ளது.
மத்திய கிழக்கில் தொடர்ந்து நிலவும் மோதல்கள் எதிர்பார்த்ததை விட நீண்டகாலமாக நீடித்து வருகின்றன. இதனால் உலகளாவிய எரிசக்தி விலைகள் உயர்வடைந்துள்ளதுடன், உணவுப் பொருட்களின் விலைகளும் அதிகரித்து வருகின்றன.
இந்த நிலைமை உள்நாட்டில் பணவீக்க அழுத்தங்களை அதிகரித்துள்ள நிலையில், 2026 ஒக்டோபரில் ஆண்டுப் பணவீக்கம் 8.3 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய வங்கி சுட்டிக்காட்டியுள்ளது.
குறுகிய காலத்தில் பணவீக்கம் மேலும் உயர்வாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால், பணவீக்க எதிர்பார்ப்புகள் இலக்கிலிருந்து விலகிச் செல்லும் அபாயத்தைத் தவிர்க்க நாணயக் கொள்கையை மேலும் இறுக்கமாக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக நாணயக் கொள்கைச் சபை தெரிவித்துள்ளது.
இதன் அடிப்படையில், வட்டி வீதத்தை உயர்த்தும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும், உள்நாட்டு விலை ஸ்திரத்தன்மையைப் பேணுவதில் தமது தொடர்ச்சியான அர்ப்பணிப்பை இந்த நடவடிக்கை வெளிப்படுத்துவதாகவும் மத்திய வங்கி தெரிவித்துள்ளது.




