காலி – உனவட்டுன பகுதியில் முறையான அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டு, ரஷ்ய பெண் சுற்றுலாப் பயணி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்து, தாக்கி, பணத்தைக் கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த நவம்பர் 05ஆம் திகதி சுற்றுலா விசாவில் இலங்கைக்கு வருகை தந்து, உனவட்டுன பகுதியிலுள்ள விடுதியொன்றில் தங்கியிருந்த 40 வயதுடைய ரஷ்ய பெண்ணே இச்சம்பவத்தில் பாதிக்கப்பட்டுள்ளார்.
பொலிஸ் விசாரணைகளின்படி, சந்தேகநபர் தன்னை சுற்றுலா வழிகாட்டியாக அறிமுகப்படுத்திக்கொண்டு, கடந்த 12ஆம் திகதி இரவு 10 மணியளவில் இரவு உணவு உண்பதற்காக அழைத்துச் செல்வதாகக் கூறி, குறித்த பெண்ணை முச்சக்கரவண்டியில் காலி நகருக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
இதன்போது, அந்தப் பெண்ணுக்குப் பாலியல் ரீதியான தொல்லை கொடுக்க சந்தேகநபர் முயற்சித்துள்ளார். இதற்கு அவர் கடுமையாக எதிர்ப்புத் தெரிவித்ததைத் தொடர்ந்து, ஆத்திரமடைந்த சந்தேகநபர் அவரது கையடக்கத் தொலைபேசியைப் பறித்ததுடன், 35,000 ரூபா கப்பம் கோரி அச்சுறுத்தியுள்ளார்.
பின்னர், மீண்டும் முச்சக்கரவண்டியில் விடுதிக்குத் திரும்பிக் கொண்டிருந்தபோது, குறித்த பெண்ணின் முகம் மற்றும் தலையில் சந்தேகநபர் தாக்குதல் நடத்தியதுடன், அவரிடமிருந்த 20,000 ரூபா பணத்தையும் வலுக்கட்டாயமாகப் பறித்துச் சென்றுள்ளார்.
எனினும், இதன்போது முச்சக்கரவண்டி சாரதி உடனடியாகத் தலையிட்டு தாக்குதலைத் தடுத்ததுடன், பெண்ணின் பயணப் பையையும் பாதுகாக்க உதவியுள்ளார்.
இச்சம்பவம் தொடர்பில் பாதிக்கப்பட்ட ரஷ்ய பெண் கடந்த 13ஆம் திகதி உனவட்டுன சுற்றுலாப் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதற்கிடையில், அவரது விசா காலம் நிறைவடைந்ததால் அவர் தற்போது இலங்கையிலிருந்து வெளியேறியுள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் சாட்சியங்களைத் திரட்டி மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளைத் தொடர்ந்து, பிரதான சந்தேகநபரைப் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
கொள்ளை, தாக்குதல், பாலியல் துன்புறுத்தல் மற்றும் உரிய அனுமதியின்றி சுற்றுலா வழிகாட்டியாகச் செயற்பட்டமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் கீழ் சந்தேகநபர் இன்று (19) காலி பிரதான நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.



