திருகோணமலை மாவட்டத்தின் தம்பலகாமம் பிரதேச செயலாளர் பிரிவில், தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபையின் வீட்டு திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட நான்கு புதிய வீடுகள் பயனாளிகளிடம் இன்று (25) கையளிக்கப்பட்டுள்ளன.
தம்பலகாமம் பிரதேச செயலாளர் கே.சதிசேகரன் தலைமையில் இடம் பெற்ற குறித்த வீடுகளைக் கையளிக்கும் நிகழ்வில் வெளிவிவகார மற்றும் வெளிநாட்டு வேலை வாய்ப்பு பிரதியமைச்சர் பிரதியமைச்சர் அருண் ஹேமச்சந்திரா பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பயனாளிகளுக்கான வீடுகளைக் கையளித்தார்.
ஒவ்வொரு வீடும் தலா பத்து இலட்சம் ரூபா பெறுமதியான வீடுகளாகும்.தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவின் பொற்கேணி, புதுக்குடியிருப்பு,மீரா நகர்,முள்ளிப்பொத்தானை ஆகிய கிராம சேவகர் பிரிவுகளில் உள்ள பயனாளிகளுக்கே இவ்வாறு வழங்கி வைக்கப்பட்டன.
வீடமைப்பு வசதிகள் அற்ற மற்றும் பொருளாதார ரீதியாகப் பின்தங்கிய குடும்பங்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக, தெரிவு செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நிரந்தரமான வீடமைப்பு வசதிகளை ஏற்படுத்திக் கொடுப்பது முக்கிய நோக்கமாகக் காணப்படுகிறது.
இதன் மூலம் நீண்டகாலமாகப் போதிய வீட்டு வசதிகளின்றி சிரமங்களை எதிர்கொண்ட குடும்பங்கள் தமக்கான பாதுகாப்பான வாழ்விடங்களைப் பெற்றுக்கொள்ளும் வாய்ப்பைப் பெற்றுள்ளன.
வீடு என்பது ஒரு குடும்பத்தின் அடிப்படைத் தேவையாக மட்டுமன்றி, சமூகப் பாதுகாப்பு, குடும்ப நலன் மற்றும் எதிர்கால சந்ததியினரின் முன்னேற்றத்திற்கான அடித்தளமாகவும் அமைகின்றது. அந்த வகையில், இவ்வாறான வீடமைப்புத் திட்டங்கள் கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தையும் வாழ்க்கைத் தரத்தையும் மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றுகின்றன.
இந்நிகழ்வில் உள்ளூர் அரசியல் பிரதிநிதிகள், பிரதேச செயலக அதிகாரிகள், வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை சபையின் மாவட்ட முகாமையாளர் ,பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.



