
ரம்புக்கனை,ஏப் 28
ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய பொலிஸ் அதிகாரிகளை கைது செய்வதற்கான நீதிமன்ற உத்தரவை செயற்படுத்துமாறு குற்றப்புலனாய்வு பிரிவுக்கு பணிப்புரை விடுக்கபட்டுள்ளது.
பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவினால் குற்றப்புலனாய்வு பிரிவுக்கு இந்த பணிப்புரை விடுக்கபட்டுள்ளது.
ரம்புக்கனை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்துடன் தொடர்புடைய அனைத்து பொலிஸ் அதிகாரிகளையும் கைது செய்து நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறு கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு புதன்கிழமை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
அத்துடன், இந்த உத்தரவை உடனடியாக நடைமுறைப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறும் கேகாலை நீதவான் நீதிமன்றத்தினால் பொலிஸ் மா அதிபருக்கு அறிவுறுத்தப்பட்டது.
இதேவேளை, ரம்புக்கனை பகுதியில் அண்மையில் முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தின் போது, பொலிஸாரினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் ஒருவர் உயிரிழந்ததுடன், 27 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.





